Published : 31,Oct 2018 01:19 PM
வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு

தீபாவளியை முன்னிட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் என, 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். முதலில், ரேஷன் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரைதான் இயங்கி வந்தன. ஆனால், மாதத்தின், முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை, விடுமுறை நாளாக இருக்கும் என தமிழக அரசு மாற்றியது. அதன்படி, ரேஷன் கடைகள், மாதத்தின், முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு வாரத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நவம்பர் 2ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி தமிழக அரசு அரசு விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.