Published : 06,Oct 2018 02:10 PM
“போராடும் தொழிலாளர்களின் பிரச்னையில் தீர்வு காண்க”- சீமான்

அறவழியில் போராடி வரும் என்ஃபீல்டு, யமஹா தொழிலாளர்களின் பிரச்னையில் அரசு தலையிட்டு உடனடித் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து நவீன கொத்தடிமைகளாக நடத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளித் தருவதாகக் கூறி வரி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அதிக லாபத்தை ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளையே மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எனவே, போராடிக் கொண்டிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.