27வயது வரை தோற்றத்தில் பெண்,உள்ளுக்குள் ஆண்! மேரேஜ்க்கு தயாரான சீன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சீனாவில் லி யுவான் என்பவர் பிறந்ததிலிருந்து பெண்ணாக இருந்தாலும், திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஆண் குரோமோசோம்கள் கொண்டவர் என்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
China woman but biological man
China woman but biological manPT

குழந்தைகள் பிறக்கும் போதே பெரும்பாலும் பாலினம் தெரிந்துவிடும். ஆனால், ஒரு சிலர் வளரும் போது தனது உடலில் சுரக்கும் ஹார்மோனை அடிப்படையாக வைத்து திருநங்கைகளாகவும், திருநம்பியாகவும் மாறுகின்றனர். இது இரண்டும் இல்லாமல் ஒரு சிலர் பிறக்கும் போதே வினோதமான உடல் உறுப்புகளுடன் பிறந்து பிறகு அறுவை சிகிச்சையின் உதவியால் பாலினத்தை அடைகின்றனர்.

இதுபோன்ற ஒரு சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

China woman but biological man
செனகல் | ஹைட்ராலிக் கோளாறு.. போயிங் விமானம் புறப்படும் போதே இறக்கை வெடித்து விபத்து!

மத்திய சீனாவின் குபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி யுவன். தன்னுடைய 27 ஆவது வயதில் லி யுவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. மிகவும் கடினமான இதயத்துடன் அதனை அவர் ஏற்க சிரமப்பட்டார். ஆம், 27 வயது வரை பெண்ணாக வளர்ந்து வந்த லி யுவன் ஒரே சோதனையில் தான் பெண் அல்ல ஆண் குரோமோசோம்களை கொண்டவர் என்பதை தெரிந்து கொண்டதும் திகைத்துப்போய் நின்றார். அதுவும், திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய தயாரான நேரத்தில் அவருடைய வாழ்க்கையில் இப்படியொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

லி யுவன் பிறந்ததில் இருந்து பெண்ணின் தோற்றத்தில் இருந்துள்ளார். வளர் இளம் பருவத்தில் அவருக்கும் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. ஆனால், வளர வளர அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவருக்கு பெண்களுக்கே உரித்தான மார்பகங்கள் வளரவில்லை. அதேபோல், மாதவிடாய் சுழற்சியும் உருவாகவில்லை. இதெல்லாம் அவருக்கு மனரீதியில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

தன்னுடைய 18 ஆவது வயதில் லி வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஹர்மோன் அளவு வித்தியாசமாக இருப்பதையும், கருப்பை செயலிழப்பு நிலையில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குரோமோசோம் சோதனையை மேற்கொள்ளுமாறு லி-க்கு மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், லி யுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவரின் அறிவுரையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், நாட்கள் கடந்து கொண்டே சென்றது. கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து தன்னுடைய 27 ஆவது வயதில் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் லி யுவன். ஆனால், அவரது மனதை தன்னுடைய உடல் குறித்த எண்ணம் உருத்திக் கொண்டே இருந்துள்ளது. என்ன செய்வது என்று பல நாட்கள் யோசித்துக்கொண்டிருந்த அவர் திட்டவட்டமாக ஒரு முடிவை எடுத்தார். ஆம், திருமணம் செய்வது என்று வந்தபிறகு அந்த சோதனையை செய்துவிடுவது நல்லது என்ற எண்ணத்திற்கு வந்தார்.

NGMPC22 - 147

மூத்த மகப்பேறு மருத்துவர் (gynaecologist) டூயன் ஜியி என்பவரிடம் பரிசோதனைக்கு சென்றுள்ளார் லி யுவன். அவர் லி-க்கு குரோமோசோம் சோதனையை செய்துள்ளார். முதல் பரிசோதனையில் லி-க்கு ஒரு அரிய உடல் கோளாறு, பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளேசியா இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், சோதனையில் இறுதி முடிவுதான் எல்லாவற்றையும் உறுதி செய்யும். ஆனால், அதற்காக ஒரு மாதம் வரை லி காத்திருக்க வேண்டியிருந்தது. திக் திக் நாட்களுடன் கடந்து வந்துள்ளார் லி.

ஒருவழியாக ஒரு மாதம் கழித்து வந்த சோதனை முடிவு மருத்துவரின் கணிப்பை உறுதி செய்தது. ஆம், லி பெண்ணாக தோற்றம் அளித்தாலும் அவருக்கு ஆணின் குரோமொசோம்கள் இருந்துள்ளது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் இந்த முடிவை தெரிவித்ததும் லி அதிர்ச்சி அடைந்துள்ளார். 27 வருடங்களாக ஒரு பெண்ணாகவே வாழ்ந்துவந்த அவருக்கு இந்த முடிவை ஏற்க முடியவில்லை. மிகுந்த சிரமப்பட்டுள்ளார். ‘congenital adrenal hyperplasia’ எனப்படும் இந்த சிக்கல் 50 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு தான் ஏற்பட வாய்ப்புள்ளது.

லியின் பெற்றோர் இருவருக்குமே இதுபோன்ற ஜீன் கோளாறு இருந்துள்ளதால் அவருக்கு நான்கில் ஒரு பங்கு வாய்ப்பு இருந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்ததால், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வைட்டமின் டி குறைபாடால் லி கடுமையாக சிரமத்தை சந்தித்துள்ளார். அத்துடன், லியின் அடிவயிற்றில் மறைந்துள்ள விதைப்பையை (testicle) உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றுமாறு மருத்துவர் பரிந்துரைத்தார். ஏனெனில் இது புற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மூலம் விதைப்பையை அகற்றியுள்ளனர்.

தற்போது, லி-க்கு தொடர்ச்சியான சோதனைகளும், நீண்ட காலத்திற்கு ஹார்மோன் தெரப்பியும் செய்ய வேண்டியுள்ளது.

அரிய வகை உடல் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள லி-க்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். வலிமையுடன் இருந்து இதனை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூறிவருகிறார்கள். லி-யின் திருமணம் திட்டம் என்ன ஆனது என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. தற்போதைக்கு மனதளவில் லி யுவன் தயாராகி வர வேண்டியதுதான் முக்கியமானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com