60 ஆயிரம் தமிழர் வாக்குகள்: எதிரணியில் சொந்தக் கட்சியினர்; ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா ரோஜா?

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஒரு சில மாநிலங்களில் மட்டும் சட்டமன்றத் தேர்தல் களமும் சேர்ந்து அனல் பரப்புகிறது..,
roja
rojapt web

ஆந்திராவில் அனல் பறக்கும் தேர்தல் களம்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஒரு சில மாநிலங்களில் மட்டும் சட்டமன்றத் தேர்தல் களமும் சேர்ந்து அனல் பரப்புகிறது. அந்தவகையில், நம் பக்கத்து மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில், 25 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலோடு 175 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலும் ஒரு கட்டமாக மே 13-ம் தேதி நடக்கிறது. தற்போது ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் ஒரு அணியாகவும் தேர்தல் களம் காண்கின்றன. அந்தவகையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதியில் நான்காவது முறையாக தேர்தல் களம் காண்கிறார் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா.

ரோஜா - நகரி

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, இரண்டுமுறை தொடர்ச்சியாக நகரி தொகுதியில் வெற்றிபெற்ற அவர், மூன்றாவது முறையாக மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். சொந்தக் கட்சியினரே ரோஜாவுக்கு எதிராக அணி சேர்ந்திருப்பது, குடும்ப ஆதிக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் ரோஜாவுக்கு எதிராக வரிசைகட்டி நிற்கின்றன.

மொத்தமுள்ள இரண்டு லட்சம் வாக்காளர்களில், 60 ஆயிரம் தமிழர்களின் வாக்குகளைக் கொண்ட நகரி தொகுதியில் மூன்றாவது முறையாக கரை சேர்வாரா ரோஜா?

roja
“கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டுமென்பதை மத அடிப்படையில் காங். முடிவு செய்யும்”-பிரதமர் பேச்சு!

தெலுங்கு தேசம் டூ ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் :

நடிகையான ரோஜா தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியது சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில்தான்.

1998-ல் அந்தக் கட்சியில் இணைந்த அவருக்கு மகளிரணித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக, 2004 தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான செங்காரெட்டியிடம் 5,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ரோஜா.

அடுத்ததாக, 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா, காங்கிரஸ் வேட்பாளரான அருண குமாரியிடம் 10,900 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அந்த ஆண்டே தெலுங்கு தேசத்திலிருந்து விலகி, அப்போது ஆந்திராவின் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆந்திராவின் அப்போதைய முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்க, அதில் தன்னை இணைத்துக்கொண்டார் ரோஜா.

ஒரு காலத்தில் சந்திரபாபு நாயுடுவின் போர்ப்படைத் தளபதியாக விளங்கிய ரோஜா, பிறகு ஜெகனின் போர்ப்படைத் தளபதியானார்.

வெற்றிபெற்ற முதல் தேர்தல் :

2014-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது ரோஜாவுக்கு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்குதேசம் வேட்பாளரைவிட, 858 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தல் களத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சியே அதிக இடங்களைப் பிடித்து ஆளும் கட்சியானது. ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திலும் வெளியிலும் பம்பரமாகச் சுழன்றார் ரோஜா.

தொடர்ச்சியாக, 2019 தேர்தலிலும் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்டு 2700 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார் ரோஜா. அதோடு, ஆந்திராவில் ஆட்சியையும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிடித்தது. கண்டிப்பாக ரோஜா அமைச்சராவார், இல்லை சபாநாயகர் ஆவார் என பல்வேறு யூகங்கள் ஆந்திர அரசியல் களத்தில் பறந்தது. ஆனால், ரோஜாவுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

இரண்டரை ஆண்டுக்குப் பிறகு ஜெகனின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, ரோஜாவுக்கு சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் அமைச்சரானார். தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாக தற்போது நகரி தொகுதியிலேயே களம் காண்கிறார் ரோஜா.

roja
வேங்கைவயல் விவகாரம்.. மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை.. எப்படி நடக்கும் voice analysis?

ரோஜாவுக்கான சவால்கள் :

ரோஜாவுக்கு மீண்டும் சீட்டு கொடுத்தற்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அதனால், பிரசாரத்துக்குச் செல்லாமல் பலர் புறக்கணித்து வந்தனர். பல உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

“ரோஜா கட்சியினருக்கு எதுவுமே செய்யவில்லை. தெலுங்குதேசம் கட்சியிலிருந்து வருபவர்களுக்கே பதவிகளை வழங்கிவருகிறார். கட்சிக்குள் ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் அவரின் சகோதரர்களின் தலையீடு அதிகமாக இருக்கிறது” என புகார் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், ‘ஜெகன் மோகன் ரெட்டி ஒவ்வொரு பிரசாரத்திலும் சந்திரபாபுவுக்கு ஓட்டுப்போட்டால் ஆந்திர மக்களின் ரத்தத்தை குடிக்க சந்திரமுகி ஆட்சி வந்துவிடும்’ என பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் உண்மையில் ரோஜாவுக்கு வாக்களித்தால்தான் சந்திரமுகி வந்துவிடும். எனவே நகரி தொகுதி மக்கள் ரோஜாவை தோற்கடிக்கவேண்டும்’’ எனப் பிரசாரம் செய்துவருகின்றனர். தவிர, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நில அபகரிப்பு, குடும்ப ஆதிக்கம் உள்ளிட்ட விஷயங்களை அரசியல் எதிரிகள் மட்டுமல்லாது சில பொதுமக்களும் புகாராக வாசிக்கின்றனர்.

ஆனாலும், தனது கணவர் ஆர்.கே.செல்வமணியோடு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ரோஜா. கடந்த ஜெகனின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்துப் பேசி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். தவிர, தனக்கு எதிராக அரசியல் வேலை செய்யும் முன்னாள் கட்சி உறுப்பினர்களுக்கும், ‘நீங்கள் தோற்கடிப்பது ஜெகனின் ஆட்சியை, ஜெகனை’ என பதிலடி கொடுத்து வருகிறார்.

நகரி தொகுதியில் மட்டும் 60 ஆயிரம் தமிழர்களின் வாக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 2 லட்சம் வாக்காளர்களில், 60 ஆயிரம் என்பது வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய வாக்குகள். தமிழர் பகுதிகளில் ரோஜாவின் கணவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் ரோஜாவும் தமிழில் பேசி பிரசாரம் செய்வதும் நடக்கிறது.

தேர்தல் அரசியல் களத்தில் முதல் இரண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ரோஜா அடுத்த இரண்டு தேர்தல்களில் குறைவான வாக்குகள் வித்தியாசமானாலும் வெற்றியைப் பதிவு செய்தார். ஆனால், இந்தத் தேர்தலில் ரோஜாவுக்கு எதிராக கடுமையான சவால்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதை சரியாகச் சமாளித்து வெற்றிபெறுவாரா, இல்லை சறுக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

roja
கோயிலுக்குச் சென்ற அகிலேஷ் யாதவ்.. கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்.. #Viralvideo

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com