Published : 04,Oct 2018 02:04 AM

இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: 293 வது வீரராக களமிறங்கும் பிருத்வி!

India-vs-West-Indies--Prithvi-Shaw-to-debut-in-first-Test

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. இதில் இளம் வீரர் பிருத்வி ஷா அறிமுகவீரராக களமிறங்குகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20  போட்டிகள் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.    

இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி, புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல் பேட்டிங்கில் அசத்துகின்றனர். இங்கிலாந்து தொடரில் சொதப்பி னாலும் சொந்த மண்ணில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  அஸ்வினும், ரவீந்திர ஜடேஜா வும் சுழலில் மிரட்டுவார்கள்.

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக மும்பையை சேர்ந்த பிருத்வி ஷா களமிறங்குகிறார். 18 வயதான இவர், 293 வது டெஸ்ட் வீரராக களமிறங் குகிறார். அவர் கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

(பிருத்வி ஷா)

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில், 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். பேட்டிங்கில் பிராத்வய்ட், சேஸ், பாவெல், ஹோப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்து வீச்சில் கேப்டன் ஹோல்டர், பிஷூ, கேப்ரியல் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இருந்தாலும் இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி, இந்த தொடரையும் வென்று சாதனை படைக்க காத்திருக் கிறது. போட்டி நடக்கும் ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இருந்தாலும் ஆஸ்திரேலிய தொடரை கவனத்தில் கொண்டு ஆடுகளத்தை மாற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறும்போது, ‘இது சவாலான போட்டி. எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சில ஆண்டுகளாக முன் னணி அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆடி நெருக்கடி கொடுத்துள்ளோம். இங்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என்றார்.  

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 18 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் 30 போட்டியிலும் வென்றுள்ளன. 46 போட்டி ‘டிரா’வில் முடிந்துள்ளது. 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்