[X] Close

கிரிக்கெட், காதல், கல்யாணம், தண்டனை... மனம் திறக்கும் ஸ்மித்!

-I-was-making-horrible-decisions----Steven-Smith-reflects

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருட தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு! ஒரு வருடம் ’பேட்’டை தொடாமல் இருந்தால் ஸ்மித் அவ்ளோதான் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், லீக் போட்டிகளில் விளையாட அனுமதியளித்திருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதையடுத்து கனடாவில் நடக்கும் குளோபல் டி20 போட்டியில் பங்கேற்றிருக்கிறார் ஸ்மித். டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக நேற்று களமிறங்கிய ஸ்மித் 41 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். 


Advertisement

போட்டிக்குப் பிறகு பேசிய ஸ்மித், ’பொதுவா எந்தப் போட்டி நடந்தாலும் எனக்கு பயம் இருக்காது. ஆனா, இன்னைக்கு (நேற்று) கொஞ்சம் நடுங்கிட்டேன். கடைசி மூணு மாசமா நான் அதிகமா கிரிக்கெட் பயிற்சி பெறலை. இப்பதான் பேட்டை பிடிச்சேன். அதனால கூட அந்த நடுக்கம் இருக்கலாம். இங்க எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்ததுன்னு நினைக்கிறேன். மனசு சரியில்லாத நிலையிலும் ரன்கள் சேர்த்தது மகிழ்ச்சியாக இருக்கு’ என்கிறார்.


Advertisement

’கிரிக்கெட் ஆடாத மூணு மாசம் கஷ்டமா இருந்திருக்குமே?’ என்று கேட்டால், ‘உண்மைதான்’ என்கிறார். ‘அந்த நேரத்தில், இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா விளையாடிய கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கிட்டிருந்தேன். இங்கிலாந்து சிறப்பா விளையாடியது. அணியில இருந்து ஆஸ்திரேலிய டீமை வெற்றி பெற வைக்க முடியவில்லையேங்கற வருத்தம் இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த இடைவெளி தேவை. ஏன்னா மனரீதியா நான் சோர்வா இருக்கேன்’ என்கிற ஸ்மித், தான் சஜகநிலைக்குத் திரும்பியதற்கு காரணமான மூன்று பேருக்கு நன்றி சொல்கிறார்.

‘அணி மானேஜர் வாரன் கிரேக், என் தந்தை பீட்டர், வருங்கால மனைவி டேலி வில்ஸ். இவங்கதான் என்னை சகஜநிலைக்கு மாற்றினாங்க. அவங்களுக்கு மட்டும்தான் தெரியும், நான் கிரிக்கெட்டை எந்தளவுக்கு விரும்பினேன்னு. கிரிக்கெட்தான் எனக்கு எல்லாம். அடுத்த மார்ச் வரை எனக்கு தடை இருக்கு. இந்தத் தொடருக்குப் பிறகு சிட்னியில் உள்ள சுதர்லேண்ட் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாட போறேன். அதுல ஷேன் வாட்சனும் விளையாடுறார். அவரோட மீண்டும் இணையறது மகிழ்ச்சியான விஷயம். அப்புறம் இந்த வருடம் டேனிக்கும் எனக்கும் திருமணம் நடக்க இருக்கு. அடுத்த வருஷம் மற்ற தொடர்கள்ல விளையாடுவேன்’ என்கிறார் ஸ்மித்.


Advertisement

பந்தை சேதப்படுத்திய விவகாரம் பற்றி கேட்டதற்கு, ‘நான் பொய் சொல்ல விரும்பலை. அது என் வாழ்க்கையில கஷ்டமான காலகட்டம். எனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஏத்துக்கிறேன். அதில் இருந்து அடுத்தக்கட்டத்துக்கு வர விரும்பறேன்’ என்கிற ஸ்மித் இனி, கிரிக்கெட் டில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன் என்கிறார். 


Advertisement

Advertisement
[X] Close