Published : 08,Jun 2018 09:04 AM
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி: அதிர்ச்சித் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் கைப்பற்றியுள்ள ஒரு கடிதத்தில் இருந்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவோயிஸ்ட்கள் 5 பேரை மகாராஷ்ட்ர காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு வந்த கடிதம் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரோனா ஜேக்கப் என்பவர் எழுதியதாகச் சொல்லப்படும் அந்த கடிதத்தில், பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் தோல்வியடைந்த போதிலும், 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா அரசை பிரதமர் மோடி வெற்றிகரமாக நிறுவியிருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், அது தங்கள் அமைப்புக்கு பல்வேறு தளங்களிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்து பாசிசத்தை தோற்கடிப்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டுள்ள அந்த கடிதத்தில், மற்றொரு 'ராஜீவ் காந்தி போன்ற நிகழ்வை' தாங்கள் சிந்திப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பொதுமக்களுடன் கலந்து பழகும் நிகழ்ச்சிகளில் அவரைக் குறி வைக்க மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளார்களோ என காவல்துறையினர் இந்த கடிதத்தின் வாயிலாக சந்தேகிக்கின்றனர். கடிதம் குறித்து மத்திய உளவுத்துறை ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. இந்த அதிர்ச்சித் தகவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.