[X] Close

‘எனக்கு வைத்த குறியில் ஸ்னோலின் மாட்டிக் கொண்டாள்’.. துப்பாக்கிச் சூட்டில் தப்பித்த பெண் பேட்டி..!

Its-Pre-planned-firing--women-interview

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தன் மீது வைக்கப்பட்ட குறி தவறி, 10ஆம் வகுப்பு மாணவி ஸ்னோலின் இறந்ததாக கூறுகிறார் அவரது தோழியான இன்ஃபன்டா. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள அவர், துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாத காரணத்தால் நடத்தப்ப‌டவில்லை என்றும், மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் ந‌டத்திய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அ‌தில்‌ ஸ்னோலின் என்ற 10ஆம் வகுப்பு மாணவியும் பலியானார். இந்நிலையில் ஸ்னோலினுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட இன்ஃபன்டா என்ற பெண் போராட்டத்தின் போது என்ன நடந்தது என்பதை பகிர்ந்து கொண்டுள்ளார். காவல்துறையினர் தாக்கியதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், போராட்ட‌க்காரர்‌கள் ஆட்சியர் அலுவலகம் செல்லும் முன்னரே வாகனங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய அவர், “ எங்கள் கைகளில் எதுவுமே இல்லை. ஆனால் நாங்கள் கலெக்டர் ஆபீசுக்கு போவதற்கு முன்பே அங்கே வண்டிகள் எரிந்துக் கொண்டிருந்தன. அது எப்படி..? எங்களை தாக்க வந்த காவல்துறையினர் அனைவரிடமும் லத்தியும், ஃபுஸ் பண்ணும் ஆயுதமும் மட்டும்தான் இருந்தன. அப்படியென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்..? பின்னாடி இருந்து எந்த துப்பாக்கிச் சூடும் நடத்தப்படவில்லை. எல்லாம் மேலிருந்துதான் நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தும்போது கூட ஸ்னோலின் ‘அக்கா வாங்க’ என என்னை தேடித்தான் ஓடிவந்தாள். எனக்கு வெச்ச குறி அது. ஆனால் அது தவறி ஸ்னோலினுக்கு சென்றுவிட்டது. கலெக்டரிடம் சென்றால் பேச்சுவார்த்தை நடத்தி எங்களது பிரச்னைகள் எப்படியாவது தீர்ந்துவிடும் என்றுதான் நினைத்தோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் பிரியாணி கொடுக்கலாம் என எவ்வளவோ ஆசையில் இருந்தோம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் முடித்தார்கள். எங்களுக்கு மருத்துவமனையில் ஒரு சாப்பாடு கூட கிடையாது. நிவாரணம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே எங்களுக்கு பெரும் நிவாரணம்” என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close