[X] Close

அப்பாடா... நாங்க போட்டியில இருக்கிறோம்: ரோகித் சர்மா நிம்மதி!

We-re-still-alive--Rohit-sharma

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம் இந்தப் போட்டித் தொடரில் இன்னும் நாங்கள் இருக்கிறோம் என்று மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறினார். 


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- மும்பை அணிகள் நேற்று மோதின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. கிறிஸ் கெயில் 40 பந்தில் 50 ரன் விளாசினார். ஸ்டோயினிஸ் 15 பந்துகளில் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சருடன் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய மும்பை 19 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. சூரியகுமார் யாதவ் 52 பந்தில் 57 ரன் எடுத்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். குணால் பாண்ட்யா 12 பந்தில் சிக்சர், 4 பவுண்டரியுடன் 31 ரன்கள் அடித்தார். ஆட்ட நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி, 5வது இடத்துக்கு முன்னேறியது. 


வெற்றிக்குப் பின் பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா,  ‘இந்த வெற்றியின் மூலம் நாங்கள் இன்னும் போட்டியில் இருக்கிறோம். இதில் சிறப்பாக செயல்பட்டோம். அனைத்து வீரர்களும் இணைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அது நடந்திருக்கிறது. பஞ்சாப் அணி, பேட்டிங்கில் மிரட்டினார்கள். அவர்களது ரன் வேகத்தை கடுமையாகப் போராடி கட்டுப்படுத்திவிட்டோம். இதுபோன்ற சேஸிங்கின் போது உத்வேகம் வேண்டும். ஹர்திக் பாண்ட்யா அவரது உண்மையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அதை பெற முடியும். அதனால்தான் நான் அவரை அடுத்து இறங்கினேன். கடைசி கட்டத்தில் என்ன மாதிரியான ஷாட் தேவை என்பது எனக்குத் தெரியும்’ என்றார்.


Advertisement

பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறும்போது, ‘நாங்கள் சரியாகவே பயணித்தோம். கடைசி கட்டத்தில் இன்னும் அதிக ரன்களை குவித்திருக்க வேண்டும். இருந்தாலும் நன்றாகப் போராடினோம். ஒரு வார ஓய்வில் புத்துணர்ச்சியுடன் வந்தோம். இந்த போட்டி தொடர் எளிதானதல்ல’ என்றார். 

ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் கூறும்போது, ‘தொடக்க ஆட்டக்காரர் என்கிற எனது புதிய ரோலை ரசித்து ஆடுகிறேன். தொடர்ந்து நிலைத்து நின்று ஆட முயற்சித்து வருகிறேன். தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை குவித்துவிட்டால் கடைசியில் வருபவர்களுக்கு அழுத்தம் குறையும். அதனால் அடித்து ஆடுகிறேன். இதற்காக அதிகம் யோசிப்பதும் இல்லை’ என்றார். 


Advertisement

Advertisement
[X] Close