Published : 04,May 2018 03:27 AM

காவிரி பிரச்சனை: கேலிக் கூத்தாக மாற்றப்படும் அபத்த நாடகம்

BJP-govt-play-drama-in-Cauvery-issue---Special-articles

காவிரி பிரச்சனையில் இறுதித் தீர்ப்பை வழங்கியபோது ‘ இன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதில் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது ‘ எனக் கறாராகக் கூறியது உச்சநீதிமன்றம். ஆனால் அது விதித்த ஆறு வாரக் கெடு முடிந்து, 2018 மே 3 ஆம் தேதியோடு மேலும் ஐந்து வாரங்கள் கூடுதலாக ஆகிவிட்டது. எந்தக் காரணமாக இருந்தாலும் கால நீட்டிப்பு இல்லை எனக் கூறிய உச்சநீதிமன்றம் இப்போது மத்திய அரசு சொல்லும் ’உப்புசப்பில்லாத’ காரணங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு வெளிப்படையாகச் சொல்லாமல் கால நீட்டிப்பை வழங்கிக்கொண்டே இருக்கிறது.

மத்திய அரசுக்கு சாதகமாகத் தனது உத்தரவுகள் அமைந்திருப்பது  வெளிப்படாமால் இருப்பதற்காகவோ என்னவோ திடீரென்று கர்நாடகா வழங்கவேண்டிய மாதாந்திர தண்ணீர் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்துள்ளது. ’ ஏப்ரல் மே மாதங்களில் தலா 2.5 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும். ஆனால் இதுவரை 1.1 டிஎம்சி மட்டும்தான் கர்நாடகா தந்துள்ளது ‘ எனத் தமிழ்நாட்டுக்காக வாதாடிய வழக்கறிஞர் சேகர் நபாடே தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களில் 2 டிஎம்சி தண்ணீர்கூட தரவில்லையா என வியப்பு தெரிவித்த தலைமை நீதிபதி ’ இந்நேரம் செயல்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தால் மாநிலங்களுக்கு வேலை இல்லாமல் போயிருக்கும். மத்திய அரசு செயல்திட்டத்தை உரிய காலக்கெடுவுக்குள் அமைக்கவில்லையென்றாலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியபடி கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கவேண்டும். நடுவர் மன்றம் குறிப்பிட்டிருப்பதில் 14 டிஎம்சி அளவுக்கு இந்த நீதிமன்றம் குறைத்தது. அதற்கேற்ப மாதாந்திர அளவில் குறைத்துக்கொண்டு தண்ணீர் விடவேண்டும். கோடை காலத்தில் தரவேண்டிய தண்ணீரின் அளவு கொஞ்சம்தான்.அந்தத் தண்ணீரை அவசரமாகத் திறந்துவிடவில்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும்’ எனத் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

கர்நாடகா உடனே தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று விசாரணையின்போது தலைமை நீதிபதி குறிப்பிட்டாரே தவிர அதை ஆணையாகப் பிறப்பிக்கவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். “ செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை 8 ஆம் தேதி பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யவேண்டும்” என்றுதான் 3-ஆம் தேதி வெளியிட்ட இரண்டு பக்க ஆணையில் தலைமை நீதிபதி கூறியுள்ளார். அவர் சொன்னதற்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் குழு ‘ இது தண்ணீர் பற்றாக்குறை காலம் ( Distress water Year ) எனவே ஏப்ரல் 2018 வரையிலான காலத்துக்கு தமிழ்நாட்டுக்கு 98.06 டிஎம்சி தண்ணீர்தான் கர்நாடகா வழங்கவேண்டும். ஆனால் 116.74 டிஎம்சி வழங்கியிருக்கிறது. இது கர்நாடகா வழங்கவேண்டியதைவிட 9.56 டிஎம்சி  கூடுதல் ஆகும் ’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த விவரங்கள் 8 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் வழங்கப்படவேண்டிய தண்ணீரின் அளவை மனம்போன போக்கில் நடுவர் மன்றம் முடிவுசெய்யவில்லை. தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் ( NWDA ) முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஜே.ஐ.கியான் சந்தானி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் முன்னாள் கமிஷனர் எஸ்.ஆர்.சஹஸ்ரபுத்தே ஆகியோரைக் கணக்கெடுப்பாளர்களாக நியமித்து அவர்கள் ஆய்வுசெய்து அளித்த கணக்கின் அடிப்படையிலேயே அந்த மாதாந்திர அட்டவணை தயாரிக்கப்பட்டது.

‘ நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டிஎம்சியில் கபினியிலிருந்து 60 டிஎம்சி பிலிகுண்டுலுவுக்கு அனுப்பப்படவேண்டும், அதைப்போலவே கிருஷ்ணராஜ சாகரிலிருந்து 52 டிஎம்சி அனுப்பப்படவேண்டும்’ எனக் குறிப்பிட்ட நடுவர் மன்றம், “ கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய நீர்த்தேக்கங்களுக்கும்  பிலிகுண்டுலுவுக்கும் இடையில் சுமார் 22 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி உள்ளது. அதை நீர்ப்பிடிப்புப் பகுதியாக எடுத்துக்கொண்டால் அங்கு பெய்யும் மழை மூலமாக 80 டிஎம்சி தண்ணீர் பிலிகுண்டுலுவுக்கு வரும்” எனக்  கணக்கிட்டது.

“தமிழ்நாட்டில் முதலில் சாகுபடி செய்யப்படும் குறுவை பயிர் செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும். அதே வயலில் சாகுபடி செய்யப்படும் தாளடி  ஜனவரி – பிப்ரவரியில் அறுவடை ஆகும். ஆகஸ்ட் – செப்டம்பரில் நடவு செய்யப்படும் சம்பா டிசம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும். இதை கவனத்தில்கொண்டே தமிழ்நாட்டில் பொதுவாக பயிர்செய்யப்படும் காலமான ஜூன் மாத மத்தியிலிருந்து ஜனவரி முடிய கணக்கிட்டு மாதாந்திர அட்டவணை தயாரிக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில நலன்களும் கவனத்தில்கொள்ளப்பட்டன’’ என நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தெளிவுபடுத்தியது. ( காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வால்யூம் 5, பக்கம் 203 ) 

தண்ணீர் திறந்து விடுவதற்காக நடுவர் மன்றம் முன்வைத்த மாதாந்திர அட்டவணையை உச்சநீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்திருக்கிறது. “ தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடுவதற்கான மாதாந்திர அட்டவணை மதிக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் ” என அது கூறியுள்ளது ( உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு, பக்கம் 464 )  

‘2018 ஜனவரியோடு 2017 ஆம் ஆண்டுக்கான சாகுபடி காலம் முடிகிறது. நடப்பு சாகுபடி காலத்துக்கு பிப்ரவரி, மார்ச்,ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கு நடுவர் மன்றம் நிர்ணயித்தவாறு தலா 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் 1.1 டிஎம்சி மட்டும்தான் வந்துள்ளது’ என தமிழ்நாட்டுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நபாடே நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் குழு வெளியிட்ட அறிக்கையில் ‘ மேட்டூர் நீர்த் தேக்கத்தில் பயன்படுத்தத் தக்க தண்ணீர் இருப்பு ( Live Storage  ) 9.6 டிஎம்சி இருப்பதாகவும் கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு நீர்த் தேக்கங்களையும் சேர்த்து மொத்தமாக பயன்படுத்தத் தக்க தண்ணீர் இருப்பு 9.93 டிஎம்சி மட்டுமே உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநில இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மையத்தின் (KSNDMC ) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 03.05.2018 நிலவரத்தைப் பார்த்தால் கபினி நீர்த் தேக்கத்தில் பயன்படுத்தத் தக்க தண்ணீர் இருப்பு ( Live Storage  ) 1.82 டிஎம்சி உள்ளது. கிருஷ்ணராஜசாகரில் 3.44 டிஎம்சி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கபினியில் 0.09 டிஎம்சியும், கிருஷ்ணராஜசாகரில் 3.25 டிஎம்சியும்தான் பயன்படுத்தத் தக்க தண்ணீர் இருப்பு இருந்திருக்கிறது. எனவே கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கர்நாடகாவின் தண்ணீர் கையிருப்பு பரவாயில்லை என்பதைப் பார்க்கமுடிகிறது.

கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் குழு சொல்வதைப்போல 2017 ஆம் ஆண்டை நாம் பற்றாக்குறை காலம் என ஒப்புக்கொள்ள முடியாது. கர்நாடக அரசு KSNDMC ல்  வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி ஜனவரி முதல் டிசம்பர் 2017 வரையிலான ஆண்டில் மைசூரு, ஹாசன், சிக்மகளூரு, உடுப்பி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வழக்கமான அளவிலும், பெங்களூரு, சாம்ராஜ நகர், மாண்டியா, கோலார் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வழக்கமாகப் பொழியவேண்டிய அளவைவிட அதிகமான மழையும் பெய்துள்ளது. அதன் காரணமாக 2018 மார் மாத நிலவரத்தின்படி 87 தாலுக்காக்களில் நிலத்தடி நீரும் நன்றாக இருக்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி மாதாந்திர தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும் எனத் தமிழகத் தரப்பு வழக்கறிஞர் உச்சந்நிதிமன்றத்தில் வாதிட்டிருக்கவேண்டும். 

புள்ளி விவரங்களின் அடிப்படையில் வாதிடுவதைக் காட்டிலும் தார்மீக காரணங்களை எடுத்துக்காட்டி வாதிடுவதற்கே தமிழ்நாட்டுத் தரப்பு வழக்கறிஞர் சேகர் நபாடே முக்கியத்துவம் தருகிறார். தமிழ்நாட்டில் நிலத்தடிநீர் இருக்கிறது என கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துக்கூறி 10 டிஎம்சியையும், பெங்களூருவின் குடிநீர்த் தேவையை சுட்டிக்காட்டி 4.75 டிஎம்சியையும் தமிழ்நாட்டின் கணக்கிலிருந்து எடுத்து கர்நாடகாவின் கணக்கில் சேர்க்க வைத்துவிட்டனர்.

கர்நாடகாவில் உள்ள நிலத்தடி நீரின் விவரங்களை எடுத்துக்கூறவோ, காவிரியை நம்பியுள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் பற்றாக்குறை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்ற விவரங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவோ தமிழ்நாட்டுக்காக வாதாடிய வழக்கறிஞர் சேகர் நபாடே முயற்சித்ததாகத் தெரியவில்லை. இப்போதும்கூட தலைமை நீதிபதியே கேட்டதால்தான் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் கொடுக்காததை சொல்லியிருக்கிறார். 

மே-8 ஆம் தேதி காவிரி வழக்கு மீண்டும் விசாரனைக்கு வரவுள்ளது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஒரு பிரமாண பத்திரமும், கர்நாடக தரப்பில் ஒரு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்படும். அவ்வளவுதான். அடுத்த வாய்தா கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகே வரும். அப்புறமும் வாய்தா வங்குவார்கள். அவ்வப்போது உச்சநீதிமன்றம் கெடு விதிக்கும், அதை மத்திய அரசு மட்டுமல்ல உச்சநீதிமன்றமும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாது. தமிழக அரசு பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுக்கொண்டே இருக்கும். மத்திய அரசு, கர்நாடக அரசு, தமிழக அரசு – என எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு உச்சநீதிமன்றத்தை அரங்காக மாற்றி ஆடுகிற இந்த நாடகம் பாஜக ஆட்சியில் இருக்கும்வரை முடியாது என்றுதான் தோன்றுகிறது.

‘ வரலாறு தன்னை இரண்டுமுறை மறுநிகழ்வு செய்துகொள்கிறது. முதன்முறை துயர நாடகமாக இரண்டாவது முறை கேலிக்கூத்தாக’ என கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவார். காவிரி பிரச்சனையின் வரலாறோ முதலில் அபத்த நாடகமாகவும், பின்னர் கேலிக்கூத்தாகவும் தன்னை மறுநிகழ்வு செய்துகொண்டிருக்கிறது. இந்த கேலிக்கூத்தின் பார்வையாளர்களாக இருப்பதா? அல்லது, போராட்டங்களின்மூலம் இதற்கு முடிவு கட்டுவதா ? என்பதைத் தமிழ்நாட்டு  மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்