[X] Close

பொய்யும் புரட்டும் நிறைந்த சமூக வலைதளங்கள்! #உஷார்!

How-we-can-use-social-site-in-useful-way

'தமிழனா இருந்தா ஷேர் பண்ணு', 'ஷேர் செய்யுங்கள் யாரோ ஒருவருக்கு பயன்படுமே', 'பத்து ஜி.பி. ப்ரீயாம்... உடனே க்ளிக் செய்யுங்கள்', 'குழந்தையின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது, உதவுங்கள் ப்ளீஸ்', ‘இந்த குரூப் ரத்தம் தேவை’, ‘குழந்தையைக் காணவில்லை’, 'பாலியல் புகாரில் சிக்கியது பா.ஜ.க. மாமியாமே' என்று எண்ணற்ற தகவல்கள், தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சியால் நாள்தோறும் உலா வருகின்றன. யூ டியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டெலிகிராம் போன்ற முன்னணி சமூக வலைதளங்களில் சுற்றும் இத்தகைய பதிவுகளையெல்லாம் உண்மை என்று நம்பி, படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை தமிழனாக ஷேர் செய்து வருகிறார்கள்.
 
இன்றைய தினத்தில் ஊடகங்களில் அதிகம் பேசப்படும் ஒரு செய்தியை சுற்றி போலி தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. அதற்கு பின்னால் அரசியல் இருக்கிறது; வணிக நோக்கம் இருக்கிறது; மதம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் நாம் உணர்வதில்லை அல்லது உணர்ந்து செயல்படுவதற்கு விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் விவகாரத்தில், அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறி சில தகவல்களும், போட்டோக்களும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், 'நிர்மலா தேவி வேறு, குறிப்பிட்டு பரப்பப்படும் போட்டோவில் உள்ளவர் வேறு' என்பது உண்மை.


Advertisement


 
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான சம்பவத்திற்கு காரணம் என்று கூறி, இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் புகார் தெரிவித்து பல்வேறு தகவல்களை பரப்பியுள்ளனர். சென்னையில் நடந்த ஐ.பி.எல். போட்டியை உதயநிதி ஸ்டாலின் பார்த்தது போன்ற பழைய புகைப்படத்தை பரப்பினார்கள். இப்படியாக பொய்யும், புனைவுகளும் நிறைந்த தகவல்களை பரப்பி நம்மை உண்மையென்று நம்ப வைக்கிறார்கள். அதை தெரிந்தோ தெரியாமலோ நட்பு வட்டத்திற்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.
 
சமூக வலைதளங்களில் பகிரப்படுவது மட்டுமல்ல நமது செல்போனுக்கு வரும் தகவல்களையும், செய்திகளையும் நம்பவே முடியவில்லை என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். அதில் நியாயம் இருக்கிறது. அதற்கு காரணம் நம்முடைய பலவீனம்தான். ஆமாம், நமக்கு வரும் தகவல்கள் உண்மையா? என்று சரி பார்த்து அனுப்ப நேரமில்லாமல் உடனடியாக யாருக்காவது அதை அனுப்பிவிட துடிக்கும் நெட்டிசன்களின் பலவீனம்தான் போலித் தகவல்களுக்கும், அதை உருவாக்குபவர்களுக்கும் உயிர் கொடுக்கின்றன. இதை நாம் எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போதுதான் போலித் தகவல்கள் உலா வருவதை தடுக்க முடியும்.


 
வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் நம்மைச் சுற்றி ஒரு வலைப் பின்னல் இருக்கிறது. நம்மை உணர்ச்சிவயப்பட வைக்கும், இரக்கம் காட்ட வைக்கும் தகவல்களையும், செய்திகளையும் வேறுவேறு கோணங்களில் உருவாக்கி பதிவேற்றுகிறார்கள். இவையெல்லாம் உண்மையா? பொய்யா? இதை ஷேர் செய்தால் என்ன நிகழும்? என்று சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமக்கு வரும் ஒவ்வொரு தகவலின் பின்னணியிலும் ஏதோ ஒரு நோக்கம் இருக்கும் என்பதை முதலில் உணருங்கள். அவற்றில் சில நண்மைக்கானதாக இருக்கும். பல தருணங்களில் அரசியலுக்கானதாகவும், வணிக நோக்கத்திற்காகவும், மத, ஜாதி ரீதியிலானதாகவும் இருக்கிறது.
 
‘‘ஒரு ஊரில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், புலி துரத்துகிறது புலி துரத்துகிறது என்று சொல்லி ஓடி வருவானாம். ஊர் மக்கள் உதவிக்காக வருவார்களாம். சிறிது நேரத்திற்கு பிறகு உண்மையில் புலி வரவில்லை என்பதையும், சிறுவனால் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதையும் ஊர் மக்கள் உணர்வார்களாம். இப்படியாக மக்களை ஏமாற்றி நம்ப வைப்பது சிறுவனுக்கு வாடிக்கையாக இருந்ததாம். உண்மையில் ஒரு நாள் புலி துரத்திக் கொண்டு வருகிறது என்று அந்த சிறுவன் கத்திக் கொண்டு வரும் போது, பொய் என்று நினைத்து மக்கள் யாரும் உதவிக்கு வரமாட்டார்களாம். புலியிடம் சிக்கி சிறுவன் உயிரிழப்பானாம்.’’ இந்த கதை தற்போதைய காலத்தில், பொய்யும், புனைவுகளும் நிறைந்த சமூக வலைதளங்களுக்கும் அதை பயன்படுத்துபவர்களுக்கும் சரியாகப் பொருந்தும்.
 
எனவே, நமக்கு வரும் எந்த தகவல்களையும் அதன் உண்மைத் தன்மையை உணராமல் யாருக்கும் அனுப்பாதீர்கள். போலியான, காலாவதியான, குப்பையான தகவல்களை உண்மையென நம்பி பிறருக்கு பகிர்ந்து, நம் மீதான மதிப்பையும், மரியாதையையும் குறைத்துக் கொள்ளாதீர்கள். என்றாவது நீங்கள் சரியானவற்றை அனுப்பினாலும் அது பொய் என்று நிராகரிக்கப்படும். ஆகையால், சமூக வலைதளங்களை / சமூக ஊடகங்களை சரியாகப் பயன்படுத்துவோம். குப்பைக் கூளங்களை ஒழிப்போம். குட் நெட்டிசன். குட் சிட்டிசன்.!


Advertisement

Advertisement

Advertisement
[X] Close