[X] Close

நாஞ்சில் சம்பத்தா? இனோவா சம்பத்தா? அல்லது இலக்கியவாதி சம்பத்தா? நீங்கள் யார்?

Nanjil-Sambath-special-story

நாஞ்சில் சம்பத்! நாவன்மை மிக்க பேச்சாளர். அப்படிதான் அவருக்கு ஒருகாலத்தில் அடையாளம் இருந்தது. அவர் பேசிய மேடைகளுக்கு அதிகம் கூட்டங்கள் குவிந்தன. ஒரு காலத்தில் மதிமுகவின் பீரங்கிப்பேச்சாளர் என்றால் இரண்டு பெயர்கள் அடிபடும். ஒன்று, நாஞ்சில் சம்பத். நாஞ்சில் மண்ணின் சுவையை தேனாக தடவிக் கொடுத்துவிடுவார். அடுத்தவர் புதுக்கோட்டை பாவாணன். முதல் நபர் தென்றல் என்றால், அடுத்தவர் எரிமலை.

இந்த இரண்டு புயல்களும் மேடைகளில் வீசத் தொடங்கினால் ‘மெல்லிய பூங்காற்று’ வீசும். எரிமலையின் அனல் வந்து அப்படியே நம் உடம்பில் பூசும். ஆனால் அந்த மேடையைவிட்டு கீழ இறங்கிய சம்பத் அதிமுகவில் அடைக்கலம் ஆனார். ஜெயலலிதா என்ற தைரியம் உடன் இருந்ததால் வைகோவை உதாசீனமாக பேசினார். ‘என் வளர்ச்சியை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என வகுந்து எடுத்தார். கட்சி காசை எடுத்து ஊரில் வீடுக்கட்டிக் கொண்டார் சம்பத் என மதிமுகவை சார்ந்தவர்கள் வசைப்பாடினர். களத்தில் நின்று கொண்டு கர்ஜித்து கொண்டிருந்தார் சம்பத்.


Advertisement

வைகோவின் மீது இவர் வைத்த குற்றச்சாட்டிற்கு அவர் ஒருபதிலும் தரவில்லை. மெளனத்தை மட்டுமே மறைமுகமாக அவர் கொடுத்தார். சம்பத் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் கிழிக்கும் கோடரியாக வைகோவை கொத்தி கிழித்து கொண்டிருந்தார். எப்போதும் பக்கம் பக்கமாக பேசும் வைகோ அதற்கு எதிர்ப்பு எதையும் கூறவில்லை. மதிமுகவின் மேடையை விட்டு எப்போது இறங்கினாரோ அப்போதே அவர் நா தடுமாற ஆரம்பித்துவிட்டது. அவர் பேசியதை அவரே மறுத்து பேசும் அளவுக்கு நகைச்சுவை நாயகனாக ஆனார். அவர் அதிமுகவில் இணைந்த போதே அவரோடு சேர்ந்து இணைந்து கொண்டது ‘இனோவா’. அப்புறம் எல்லோரும் அவரை ‘இனோவா சம்பத்’ என வசைப்பாடினார்கள்.

ஒரு காலத்தில் இனிக்க இனிக்க மேடைகளில் இலக்கியம் பேசிக் கொண்டிருந்த சம்பத் இணையதள வாசிகளுக்கு இனிப்பு பண்டமானார். மீம்ஸ் போட்டு பலர் இவரை இம்சை செய்து வந்தார்கள். ஆனாலும் மனிதர் சளைக்காமல் சந்தோஷமாக பேசினார். ‘நான் சாதாரண போன்தான் வைத்திருக்கிறேன். ஆனால் வரும் மீம்ஸ்களை சொல்வார்கள், கேட்டுக் கொள்வேன் அவ்வுளவுதான்’ என்றார். அதை கேட்டு இன்னும் குஷியானார்கள் நெட்டீசன்கள். அதன் விளைவு, ஒரு கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் என்று கூட பார்க்காமல் ஒரு பண்பலையில் அவரை அழைத்து வந்து ‘வெச்சு செய்தார்கள்’. அப்போதும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தார் சம்பத்.

அதிமுகவில் ஜெயலலிதா இருக்கும் வரை அவர் பெரிய கெளரவம் அடைந்ததாக தெரியவில்லை. வழக்கமாக ஒரு கட்சிக்கு கொள்கைப்பரப்பு செயலாளர் அவ்வளவுதான். மேலும் கொஞ்சம் வாயாடி தனமாக பேசியதாகக் கூட அவரை கட்சியில் இருந்து விலக்கி வைக்கும் சூழலும் உருவானது. ஜெயலலிதா அப்போலோவில் இருக்கும் போது வாசலில் நின்று கொண்டு சம்பத் கொடுத்த வாக்குறுதிகள் வரலாற்று சிறப்பு மிக்கவை. அதன் பிறகு அதிமுக அதிரடியாக சசிகலா கைக்குப் போனது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ‘மெளன விருதம்’ கடைப்பிடித்தவர் சொந்த ஊரிலேயே செட்டில் ஆனார். பிறகுஎன்ன நினைத்தாரோ தெரியாது, ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது என்றார். அப்போலோ வாசலில் இருந்தபோது இவரும் சி ஆர் சரஸ்வதியும் கொடுத்த வாக்குறுதிகளை இவர்களே காற்றில் கொண்டு வந்து தூற்றினார்கள். சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்றதும் “தவிடு நெல்லாகிவிட்டது… வான்கோழி மயிலாகிவிட்டது!” என வசனம் பேசினார். அதுதான் அவரது ஹைலைட்.

“ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர், அமைச்சர்கள், மேயர்கள் என அதிகாரத்தின் உச்சம் தொட்ட அனுபவசாலிகளைக்கொண்ட ஒரு பெரிய அமைப்பில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலாவுக்கு மட்டுமே தகுதி உண்டு என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்து இருப்பது 2016-ம் ஆண்டின் மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தில் நான் என்னைக் கரைத்துக் கொள்ள விரும்பவில்லை.” என்றார். அவரது துடிப்பான பேச்சைக் கண்டு உற்சாகத்தில் மிதந்தது அதிமுகவின் மற்றொரு தரப்பு. 

அதன் பிறகு அவரது முடிவை அவரே மாற்றிக் கொண்டார். சரியாக சொன்னால் பல்டி அடித்தார். இனோவோவாவை ஒப்படைக்கப் போகிறார் என பார்த்த போது அவருக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது. 2017 ஆண்டு ஜனவரி மாதம் போய் அவர் சசிகலாவை சந்தித்தார். அவருக்கு கண்கள் பனித்தன. மனம் இனித்தது. ஆகவே அவர் சசிகலா தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொண்டார். பிறகு அவர் சிறைக்கு செல்லவே டிடிவி தினகரன் பக்கம் போனார். ‘காலம் தந்த தலைவன் டிடிவி தினகரன்’ என்றார். ‘வசீகரமானவர்’ என்றார். ‘அதிமுகவை காப்பற்ற கிடைத்த ஒரே தலைவன்’ என்றார். அதன் பின் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதை அதிகப்படுத்தினார். ‘புத்தர், ஏசுநாதர் மாதிரி நம்ம சின்னம்மா’ என பேட்டியளித்தார். 

இதற்கிடையே கட்சி இபிஎஸ்-ஒபிஎஸ் அணிக்கு போனது. இரட்டை இலையும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குப் போனது. ஆகவே இனோவாவை கேட்டு கடிதம் அனுப்பினர். தனது வழக்கறிஞர் மூலம் இனோவாவை கொடுத்துவிட்டு வந்தார் சம்பத். அதன் பின்புக் கூட அவர் டிடிவி தினகரன் பக்கம்தான் நின்றிருந்தார். இப்போது டிடிவி தினகரன் தனிக் கட்சி(கட்சியா/அமைப்பா..???) தொடங்கியுள்ள நிலையில் அதில் ‘அண்ணா பெயர் இல்லை. திராவிடம் இல்லை. ஆகவே அதை ஏற்க முடியாது’ என்கிறார். உண்மையில் சம்பத்திற்கு என்னதான் ஆனது? சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாரே? என பலரும் மண்டைக் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ‘கொள்கை திரவியத்தை கொட்டிக் கவிழ்கிறார். பச்சைப் படுகொலை பண்ணப்பார்க்கிறார். குலநாசம் செய்கிறார்’ என இன்பத் தமிழால் துன்பக் கதைகளை பேசி வருகிறார். 

அன்று காவியத்தலைவனாக தெரிந்தவர் இன்று பச்சைப்படுகொலை செய்வது ஏன்? ‘வசீகரமாக’ தெரிந்தவர் இன்று குலநாசம் செய்தவர் ஆனது ஏன்? எல்லா வற்றிற்கும் சம்பத்திற்கு மட்டுமே பதில் தெரியும். ஜெயலலிதா திராவிடத் தலைவியாம். அவர்தான் கோயில்களில் பலியிடுதல் கூடாது என்றார். பாபர் மசூதி கட்டுவதற்கு கறைசேவைக்கு கருங்கல் அனுப்பினார். ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்றார். எல்லா கோயில்களுக்கும் போய் கும்பிட்டுக் கொண்டிருந்தார். வளர்மதியின் கடவுள் கொள்கையை கேள்வி கேட்டவர்கள் ஜெயலலிதாவின் ஆன்மிகம் குறித்து கேள்வி எப்போதும் எழுப்பியதில்லை. ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்து கேள்வி எழுப்புகின்றவர்கள் ஜெயலலிதாவின் மதச்சார்புக் கொள்கைகள் குறித்து சத்தம் போட்டதில்லை. 

திராவிடம் என்ற சொல் இல்லை. அண்ணா என்ற தலைவனின் படம் இல்லை. எல்லாம் சரி. திராவிடம் என பெயரை தாங்கியுள்ள அதிமுக திராவிட இயக்கமாக தன்னை என்றாவது அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதா என அவர்தான் விளக்க வேண்டும். பலரும் அதை வெறும் வார்த்தை அளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே ஒழியே அதற்கு செயல்வடிம் கொடுக்க முன் வந்திருக்கிறார்களா? அதைதானே பலரும் பல காலமாக கேட்டு வந்திருக்கிறார்கள். அந்த உண்மையை அறியதவரா நாஞ்சில் சம்பத்? 

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close