Published : 06,Feb 2018 08:12 AM
சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் ஓவியா?

நடிகை ஓவியா புதிய படம் ஒன்றில் சிம்புவுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்க உள்ள புதிய படத்திற்காக தற்சமயம் சிம்பு பிசியாக இருக்கிறார். அதற்காக அவர் தனது உடல் எடையை குறைக்க ஒர்க் அவுட் செய்து வருகிறார். அதற்கான வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்நிலையில் சிம்புவின் புதிய படம் ஒன்றில் நடிகை ஓவியா ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. தயாரிப்பாளரும் இயக்குநருமான அனிதாவின் படம் ஒன்றில் இவர்கள் இருவரும் ஜோடி சேர உள்ளதாகக் கூறப்படுகிறது. மாயாஜால் மல்டிப்ளக்ஸின் உரிமையாளரான அனிதா , ‘பெண்டாமீடியா குரூப்’ மூலம் இப்படத்தை எடுக்க இருக்கிறார்.
ஏற்கெனவே ஓவியா, சிம்புவின் ‘மரண மட்டை’ ஆல்பத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்போது இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்தி பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி மட்டுமே என பின் விளக்கம் தரப்பட்டது.
தற்சமயம் ‘காஞ்சனா3’ மற்றும் ‘கே2’ படத்தில் மும்முரமாக உள்ள ஓவியா இதற்கு பிறகு சிம்புவுடம் இணைந்து நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.