Published : 02,Feb 2018 01:47 PM

கோவை அரசு அச்சகத்தை மூட இடைக்காலத்தடை

The-Coimbatore-government-press-Issue

கோவையில் உள்ள இந்திய அரசு அச்சகத்தை மூடவும், ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் மத்திய அரசு பிறபித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் அருகே இயங்கிவரும் அச்சகத்தில் 65 பேர்  பணிபுரிந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள 17 மத்திய அரசு அச்சகங்களை ஒன்றாக இணைத்து, 5 அச்சகங்களாக மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் டிசம்பர் மாதம் முடிவெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், கோவை அச்சகத்தை நாசிக்கிலுள்ள மத்திய அச்சகத்துடன் இணைக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கு ஏதுவாக டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அச்சகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்றும், தற்போது அச்சுப்பணியில் உள்ளவர்கள் பிற அச்சகங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்றும் மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அச்சகத்துறை இயக்குனரகம் அறிவிப்பாணை வெளியிட்டது. 

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கோவை இந்திய அரசு அச்சகப் பணியாளர் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் பணியாளர் இடமாற்றம் செய்யத் தடைவிதிக்க மறுத்து ஜனவரி 12ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், டீக்காராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே அச்சகத்தை மூடவும், ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் கர்நாடக மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளதன் அடிப்படையில் கோவை அச்சகத்தை மூடவும், ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் இடைக்காலத் தடைவிதித்து, வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்