Published : 30,Jan 2018 09:52 AM

‘தமிழ் இணையத் துறைக்கு பேரிழப்பு’: யார் இந்தத் தகடூர் கோபி...!

Who-is-Thagadoor-Gopi

தமிழ் எழுத்துக்களை யூனிகோடுக்கு மாற்றும் எழுத்துரு மற்றும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கித்  தந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் தகடூர் கோபி ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 42.

தற்போது கணினியில் தமிழை மிக எளிதாக காண முடிகின்றது என்றால் அதற்கு மிகமுக்கிய காரணம் தகடூர் கோபி.  தமிழ் எழுத்துக்களை யூனிகோடுக்கு மாற்றும் கணினித் தமிழன்.

தர்மபுரி மாவட்டம் குமாரசாமி பேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான தணிகாச்சலம் என்பவரின் மகன்தான்  தகடூர் கோபி. தமிழ் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றி தரும் "அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி" ஆகிய கருவிகளை உருவாக்கி தமிழ் உலகிற்கு பெரும் பங்காற்றியவர் கோபி. தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றும் கருவிகளையும் கோபி உருவாக்கி உள்ளார்.

2004ம் ஆண்டு தகடூர் கோபி தமிழில் வலைப்பதிவு தொடங்க காரணமாக இருந்தவர் சீனு. அதன் பின் சுரதா அவர்கள்தான் தகடூர் தமிழ் மாற்றியின் உருவாக்கத்தில் ஒவ்வொரு நிலையிலும் தகடூர் கோபிக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். இப்படியாக தான் தகடூர் கோபிக்கு இணைய தமிழ் ஈடுபாடு ஏற்பட்டிருகிறது. இதனை தகடூர் கோபியே ஒரு நேர்காணவில் அவரது நண்பரான இளங்கோவனிடம் தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து தகடூர் கோபியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் தனது வலைத்தள பக்கத்தில் கூறும்போது,“ இணையத்தில் எனக்கு தேவைப்படும் ஐயங்களை விரைவில் போக்கக்கூடியவர். கோபி உருவாக்கிய மென்பொருள்களுக்கு அதியமான், ஔவை, தகடூர் என்ற பெயர் வைத்தமை ஒன்றே அவரின் மொழிப்பற்றையும் வெளிப்படுத்துவதற்கு போதுமான சான்றாகும். எல்லாவற்றிற்கும் மேலாக தகடூர் கோபி மிகச் சிறந்த மொழிப்பற்றாளர். இவர் பல மாநாடுகளில் பேசியுள்ளார். தகடூர் கோபியின் மறைவு தமிழ் இணையத் துறைக்கு பேரிழப்பு” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்