Published : 12,Jan 2018 07:54 AM

சீறும் காளைகளும், பாயும் காளையர்களும் தயாராகும் விதம்...

Madurai--Jallikkattu--Ground-Reality

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு வீரப்போட்டி ஜல்லிக்கட்டு.

மெரினா புரட்சி:

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாகும். இது தமிழர்களின் உணர்வோடு எந்த அளவு கலந்துள்ளது என்பதற்கு மெரினா புரட்சி உட்பட தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இளைஞர்களின் போராட்டமே உதாரணம். ஏனெனில் இந்தப் போராட்டம் தமிழகத்தை அதிர வைத்ததுடன் இல்லாமல், இந்தியாவையே அசர வைத்தது. உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.

இந்தப் போராட்டம் உடைத்தது ஜல்லிக்கட்டுக்கான தடையை மட்டுமல்ல, தமிழர்களின் ஒற்றுமைக்கு எதிரான அனைத்து கருத்துக்களையும் தான். ஏனெனில் 6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை களத்தில் இறங்கி போராடிய களம் அது. ஜாதி, மத பேதமின்றி போராடிய அனைவரின் ஒட்டு மொத்த குரலாக ஒலித்தது ‘ஜல்லிக்கட்டு’ என்ற ஒரு மட்டும் தான்.  

ஒலிம்பிக் வீரர்களைப் போல்:

மாடுகள் என்பது தமிழர்களின் கால்நடைகளாக மட்டுமில்லாமல் குடும்பத்தில் ஒருத்தராக வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளை என்றால் அதற்கு தனி அக்கறை உண்டு. ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் பண்டிகையின் போதும், கோவில் திருவிழாக்களின் போது நடைபெறுவதை தான் நாம் காணுகிறோம். ஆனால் இதில் பங்கேற்கும் காளைகளும், வீரர்களும் அதற்காக எத்தனை மாதங்கள் பயிற்சியும், கடின உழைப்பும் மேற்கொள்கின்றனர் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போல ஒவ்வொரு காளையும், காளையை அடக்கும் வீரரும் தங்களை தயார் படுத்தினால் மட்டுமே களத்தில் வெற்றியை வீரத்துடன் பெற முடியும் என்பதே சாத்தியம்.

ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவதில் மதுரையும் ஒன்று. அதிலும் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு என்றாலே அதைக்காண பெருங்கூட்டம் வருகை தரும். அத்தைய மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக தயாராகும் காளைகள் மற்றும் காளையர்கள் குறித்து புதிய தலைமுறை களத்திற்கு சென்று தகவல்களை சேகரித்துள்ளது.

100 கி.மீ வேகத்தில் பாயும் காளைகள்:

மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, காளைகளை வீரர்களுடன் விளையாட செய்வது உள்ளிட்ட பயிற்சிகளும், இவற்றுடன் நாள்தோறும் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் மட்டுமின்றி காளைகளின் உடல் கட்டுமஸ்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவைகள் வழக்கமாக உண்ணும் உணவுகளுக்கு பதிலாக போட்டிகளில் பங்கேற்கும் காலங்களில் பேரிச்சம்பழம், பருத்தி விதை தலா 2 கிலோ, பாதம் பருப்பு, நாட்டு கோழி முட்டை போன்ற ஊட்டசத்தான உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. 

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்களை போல காளைகளுக்கும் முறையான, கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. காளைகளைப் போலவே அவற்றின் கொம்புகளும் ஜல்லிக்கட்டுக்காக கூர்மையாகவும், வலிமையாகவும் மெருகேற்றப்படுகின்றன.

கொம்புகளை தயார் செய்யும் போது, காளைகள் கொம்புகளால் மண்ணை குத்தி விசுறுவது தனி அழகுதான். இவ்வாறு தயார் ஆகும் காளைகள் ஜல்லிக்கட்டு களத்தில் சுமார் 100 கி.மீ வேகத்தில் பாய்ந்து ஓடுகின்றன. அதுவரும் வேகத்தை பார்க்கும் போதே பல வீரர்கள் மிரண்டு விடுவது உண்டு. 

 

ஆனால் இந்த அதிவேக ஓட்டத்தினால் அவற்றின் காலில் சுளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மூச்சு வாங்கி காளைகள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

காளையர்களின் நுணுக்கங்கள்:

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க தயாராகும் வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, காளைகளின் பயிற்சிக்கு சற்றும் குறைந்ததல்ல. ஜல்லிக்கட்டுக்காக தயாரகும் அவர்கள் செயற்கையாக வாடி வாசல் உருவாக்கி காளைகளை அடக்க பயிற்சி மேற்கொள்கின்றனர். முறையாக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே ஜல்லிக்கட்டு களத்தில் காளையுடன் விளையாட முடியும். புதிதாக உருவாகும் வீரர்களுக்கு வாரந்தோறும் ஜல்லிக்கட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு செல்லும் வீரர்கள் அதற்கான உடல் நலத்தை பெற உணவுகளில் மாற்றம் மற்றும் முழுஉடல் பயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பயமின்றி காளைகளை அடக்க மனதை ஒருநிலைப்படுத்தும் யோகாசனம் மிக முக்கியமானது. காலை ஓட்டப்பயிற்சி, மாலை நீச்சல் பயிற்சி, காளைகளை ஓடவிட்டு உடன் ஓடுதல் போன்ற பயிற்சிகளும் அவசியம். புதிதாக களம் காணும் இளைய வீரர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நீண்ட காலமாக பங்கேற்கும் வீரர்களை கொண்டு காளைகளை அடக்குவதற்கான நுணுக்கங்களையும், செயல் முறைகளையும் கேட்டு தெரிந்து வருகின்றனர். காளைகளின் தலை அசைவு மூலம் அடுத்து நடக்கப்போவதை உணர்வது, எந்த நேரத்தில் மதில் மீது பாய வேண்டும் என கணிப்பது, எந்த நேரங்களில் விலக வேண்டும் போன்ற நுணுக்கங்கள் களத்தில் கைகொடுப்பவைகளாக உள்ளன. 

பயிற்சிகளே இல்லாமல் காளைகள் மற்றும் வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு நேர் எதிர்மறையாக, முற்றிலும் முறையான பயிற்சியை மேற்கொண்ட பின்னரே, காளைகளும் வீரர்களும் களத்தில் இறங்குகின்றனர் என்பதே மாற்றுக்கருத்தில்லாத உண்மை. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்