
சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதியினர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
கொடைக்கானல் அருகே வில்பட்டியில் டிரைவராகப் பணிபுரியும் குகனும், அதே ஊரைச் சேர்ந்த கவுசல்யாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் முடித்துக் கொண்டனர். மேலும் தங்களது உயிருக்கு உத்திரவாதம் வேண்டி கொடைக்கானல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
விபரம் கேள்விப்பட்ட இரு தரப்பினரைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் கொடைக்கானல் காவல் நிலையத்தின் முன்னே குவிந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். கொடைக்கானல் காவல் நிலைய உதவி கண்காணிப்பாளர் செல்வம் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தினார். காவல் நிலையம் எதிரே நடந்த தள்ளுமுள்ளுவால் சிறிது நேரம் காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.