
கோடியக்கரை அருகே நடுக்கடலில் நாகை மாவட்ட மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், மீன்களை பறித்துக் கொண்டு வலைகளையும் சேதப்படுத்தியிருக்கின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் நாகை பெருமாள்பேட்டை, தரங்கம்பாடி, புதுப்பேட்டை, காரைக்கால்மேடு செருதூர், போன்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்
இதில் பெருமாள்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன் என்பருடைய படகில் நாகராஜன், தங்கதுரை, குப்புராஜ் லெட்சுமணன் மாதேஷ் ஆகிய ஐந்து பேர் நேற்று 29-ம் தேதி மாலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் இன்று 30-ம் தேதி அதிகாலையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணி மேற்கொண்டு வந்த இலங்கை கடற்படையினர் பெருமாள்பேட்டை மீனவர்களின் படகின் மீது குறுக்கே மோதியதில் படகில் இருந்த தங்கதுரை, குப்புராஜ் லெட்சுமணன் மாதேஷ் ஆகிய நான்கு மீனவர்கள் கடலில் விழுந்தனர். ஒரு மணிநேரத்திற்கு மேல் நான்கு மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்தனர். இலங்கை கடற்படையினர் மோதியதில் நாகை படகு சேதமடைந்தது.
படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த ரூ.50,000 மதிப்புள்ள மீன்களை பறித்து கொண்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்து சேதப்படுத்தி விட்டு இலங்கை கடற்படையினர் சென்றுவிட்டனர். இதில் அச்சமடைந்த மீனவர்கள் ஐந்து பேரும் மீன்பிடிக்காமல் மாலையில் கரை திரும்பினர்.