Published : 29,Dec 2017 08:47 AM
இஸ்லாமிய பெண்களின் நலனில் பாஜக அரசுக்கு அக்கறை இல்லை: ஸ்டாலின்

முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்ட மசோதாவில், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தலாக் சட்டவிரோதம் என்று அறிவிக்கும் வகையில் பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள மசோதாவால், இஸ்லாமிய பெண்களின் நலனில் உண்மையிலேயே நியாயமான அக்கறை மத்திய அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும், 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய கிரிமினல் நடவடிக்கையாக இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருப்பது தேவையற்றது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கும் அனுப்பாமல், கடுமையான சிறை தண்டனைக்கும் வழிவகுக்கும் இந்த மசோதா, இஸ்லாமிய பெண்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைதானா? என்பதை பாஜக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் பன்முகத்தன்மை, ஒருமைப்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்ட மசோதாவை இனியாவது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.