Published : 15,Dec 2017 11:12 AM
திருவண்ணாமலை ஆசிரம சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி

திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில், ரமணர் ஆசிரம சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கத் திட்டத்திற்காக வாய்க்கால் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செங்கம் சாலையில் உள்ள ரமணர் ஆசிரமத்தின் மதில் சுவரை ஒட்டி வாய்க்கால் தோண்டும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மதில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி குமரேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜேஷ், காதர் ஆகிய இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், சிகிச்சை பலனின்றி காதர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் பொன்னி, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். ரமணர் ஆசிரமத்தின் மதில் சுவர் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்றும் அதை அகற்றக்கோரி ஏற்கனவே ஆசிரம நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.