[X] Close

ஆஸ்கர் விருது நமக்கு எட்டாக் கனவாகவே இருக்கிறதே... ஏன்?

Oscar-awards

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது அறிவிக்கப்படும் போது, அப்படியே எட்டிப்பார்த்து விடுகிறது, இந்தக் கேள்வியும்.

‘தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கர் விருது சாத்தியமா?’ .

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே இது சாத்தியமா? என்று கேள்வியைத் திருத்தியும் கொள்ளலாம்.


Advertisement

ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான், அகாடமி அவார்ட் என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929-ம் வருடம் மே 16-ம் தேதி, ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஓட்டலில் நடந்த முதல் விருது விழாவில், பார்வையாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது, இவ்வளவு பிரமாண்டமாக, உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக, எதிர்காலத்தில் இது இருக்குமென்று.

இன்று உலக அளவில் உற்று நோக்கப்படும் ஒரே சினிமா விருது விழாவாக இதுதான் இருக்கிறது. 1930ல் இருந்து ரேடியாவில் வர்ணனை செய்யப்பட்ட இந்த விருது விழா, 1953-ல் இருந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இன்று உலக அளவில் இருநூறுக்கும் அதிகமான சேனல்களில் நேரலையாக ஒளிப்பரப்படும் நிகழ்ச்சியாக இருக்கிறது, ஆஸ்கர் விருது விழா.

ஹாலிவுட் படங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த விருதுக்கு, சர்வதேச வரவேற்பு, மரியாதை வேண்டும் என்பதற்காக, 1956-ல் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவை ஆரம்பித்தார்கள். பிற நாடுகளின் படங்கள் இந்தப் பிரிவின் கீழ் மட்டுமே போட்டியிட முடியும். அப்படிப் போட்டியிட்ட படங்களில் ஐரோப்பிய படங்களே இதுவரை அதிகமான விருதுகளை வென்றுள்ளன. ஆசிய படங்கள் மிகக் குறைவான விருதுகளையே வென்றுள்ளன.


Advertisement

இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்தப் பிரிவில் சிறந்த படங்களுக்கு மட்டுமே விருது உண்டு. நடிகர், நடிகைகளுக்கு அல்ல. ஆரம்பத்தில் சிறந்த உதவி இயக்குனர், சிறந்த காமெடி பட இயக்குனர், சிறந்த டைட்டில் ரைட்டிங், நடன இயக்கம் உட்பட ஏராளமான பிரிவுகளில் விருதுகளைக் கொடுத்த ஆஸ்கர் விருதுக்குழு, பிறகு இது போன்ற விருதுகளை ஓரங்கட்டி வைத்துவிட்டது. இப்போது மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகளைக் கொடுக்கிறார்கள்.

இப்படி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கிற இந்த விருது, இதுவரை இந்தியப் படங்கள் எதற்கும் - தமிழ், இந்தி, மராட்டி, பெங்காலி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, கொங்கனி என எந்த மொழிப் படத்திற்கும் - கிடைக்கவில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், நாம் சிறந்தப் படம் என நம்புகிற, ஏதாவது ஒரு படத்தைத் தேர்வு செய்து, தேர்வுக் குழு பரிந்துரைக்கிறது. இந்த தேர்வுக் குழு, எந்த அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்கிறது என்பதில் பல சர்ச்சைகள் உள்ளன.

ஒவ்வொரு இந்திய மொழியிலும் அந்தந்த வருடங்களில் வெளியாகும் சிறந்தப் படங்களைப் பார்த்து, அதிலிருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்து ஆஸ்கருக்கு அனுப்புகிறார்கள். ஆனால் விருதுதான் கிடைத்தபாடில்லை.

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட படங்களில், தமிழ் சினிமாவில் இருந்து மட்டும், இதுவரை ஒன்பது படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

முதன்முதலில் ஆஸ்கருக்கு இங்கிருந்து அனுப்பி வைக்கப் பட்ட படமே, தமிழ்ப்படம்தான். அது, சிவாஜிகணேசன் மூன்று வேடத்தில் நடித்த, ‘தெய்வமகன்’. 1969-ல் வெளியான இந்தப் படத்தை அடுத்து, 1987-ல் மணிரத்னத்தின் ‘நாயகன்’ ஆஸ்கருக்கு சென்றது. பிறகு, 1990ல் ‘அஞ்சலி’, 1992ல் கமலின் ‘தேவர் மகன்’, 1995ல் ‘குருதிப்புனல்’, 1996ல் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’, 1998ல் ‘ஜீன்ஸ்’, 2000-ம் ஆண்டில் கமலின் ‘ஹே ராம்’, கடந்த வருடம், வெற்றிமாறனின் ‘விசாரணை’.

இதில் எதுவுமே ஆஸ்கரின் கண்களுக்குச் சிறந்தப் படமாகத் தெரியவில்லை.

இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்காததற்கு நமது படைப்புத் திறனைத்தான் குற்றம் சொல்கிறார்கள்.

‘சிறந்த படங்களுக்கு கண்டிப்பாக, ஆஸ்கர் விருது கிடைக்கும். அது எந்த நாடாக இருந்தாலும் சரி. சிறிய நாடான இலங்கையில் எடுக்கப்படும் படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளை வெல்கின்றன. ஆனால் தமிழ்ப் படங்களும் சரி, இந்தியப் படங்களும் சரி, இப்போதுதான். சர்வதேசப் பட விழாக் களுக்கே படங்களை அதிகமாக அனுப்பும் நிலைக்கு வந்திருக்கிறது. அதற்குக் காரணம், பேரலல் சினிமா என்று சொல்லப்படுகிற, மாற்று சினிமா இங்கு இல்லை. சில முயற்சிகள் மட்டுமே நடந்திருக்கிறது. கமர்சியல் சினிமா என்பதைத் தாண்டி, அடுத்தக்கட்ட ரசனைக்கு நம் சினிமா, இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் சிறந்த டெக்னீஷியன்களை உருவாக்குகிறோம் என்பதில் பெருமையடையலாம். ஆனால் சிறந்தப் படைப்புகளை உருவாக்கவில்லை. நாம் நல்ல படங்கள் என்று சொல்கிற படங்களை விட, உலக அளவில் பார்க்கும்போது, மற்ற நாடுகளின் படங்கள் சிறப்பான படங்களாக இருப்பதால், அவற்றிற்கு விருது கிடைக்கிறது. சர்வதேச அளவில் படங்களை உருவாக்கினால் மட்டுமே, வெளிநாட்டுப் படப் பிரிவில், ஆஸ்கர் கனவு சாத்தியம்’ என்கிறார்கள் தமிழ் சினிமா ஆர்வலர்கள்.

கமல்ஹாசன் ஒரு பேட்டியில் ஆஸ்கர் விருது பற்றி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது: ‘இந்த ஊர்ல வியாபாரம் செய்றவங்களுக்கு ஐ.எஸ்.ஐதான் முக்கியம். யு.எஸ்.ஏ எதற்கு?

-ஏக்நாத்

Related Tags :

Advertisement

Advertisement
[X] Close