Published : 01,Nov 2017 01:47 PM
கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் லேசான மழை பெய்த போதிலும், இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தொடர் மழை காரணமாக சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகரிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதேபோல் பல்வேறு பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் அதன் கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டநிலையில் தற்போது 3-வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.