[X] Close

மேட்டூர் அணை நீர்த் திறப்பு குறைந்தது

water-release-level-decreased-from-mettur-dam

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துவிட்டதால் சம்பா சாகுபடிக்கான நீர்த் திறப்பும் குறைக்கப்பட்டிருக்கிறது. நீர்த் திறப்பது 15 ஆயிரம் கன அடியிலிருந்து 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement

தமிழக டெல்டா மாவட்டத்தில் நடைபெற்று வரும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு முற்றிலுமாக குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1,400 கன அடி அளவுக்கு மட்டுமே தற்பொழுது வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்ததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணைக்கான நீர் வரத்து கணிசமாக குறைந்ததாலும் நீர்த் திறப்பு அதிகமாக வெளியேற்றப்பட்டு வருவதாலும் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இதனால் டெல்டா மாவட்டத்திற்கு திறக்கப்பட்டுவந்த 15 ஆயிரம் கன அடி தண்ணீரை 12 ஆயிரம் கன அடியாக குறைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஒரு சில தினங்களில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து, டெல்டா பாசனத்திற்கான நீர்த் திறப்பை குறைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 87.10 அடியாகவும், நீர் இருப்பு 49.39 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1,401 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது, அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close