
6 நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்த தென்கொரிய மீனவர்களை தற்போது வடகொரியா விடுதலை செய்திருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவை பணிய வைக்க அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா அந்நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து வடகொரியா எல்லைப் பகுதியில் தீவிர போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் 6 நாட்களுக்கு முன் தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தென் கொரிய மீனவர்களை, வடகொரிய கடற்படையினர் கைது செய்தனர். விசாரணையில் வழி தவறி வந்தது தெரியவந்ததால், மீனவர்கள் அனைவரையும் வடகொரியா விடுவித்தது. மேலும் மீனவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டதால் அவர்களை விடுவித்ததாக வடகொரியா தெரிவித்தது. வடகொரியாவின் இந்த செயல் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.