Published : 15,Oct 2017 03:35 AM

‘ஒரே பாரதம்’ திட்டத்தில் தமிழ் மொழிக்கு இடமில்லையா..?

Tamil-Language-not-participate-Modi-government-in-Ek-Bharat-Shreshtha-Bharat-website-advertisement

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் இணையதளத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவிர் நதிநீர் பங்கீடு விவகாரம், ஹைட்ரோ கார்பன் திட்டம், கெயில் எரிவாயு திட்டம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களில் கூட மத்திய அரசுக்குத்தான் அதிக அளவில் எதிர்ப்பு நிலவியது. 

இத்தகைய நிலையில், நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்' என்ற இணையதளத்தில் (http://ekbharat.gov.in/) தமிழ்மொழி இடம்பெறவில்லை. 

சர்தார் வல்லபாய் படேலை கௌரவிக்கும் வகையில் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 'ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்' என்றால் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்று அர்த்தம். மத்திய அரசின் மனிதவளத் துறையின் கீழ் இந்த இணையதளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. குறிப்பாக மாநிலங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டம் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், 'ஏக் பாரத் ஏக் ஸ்ரேஷ்தா' இணையதளத்தின் முகப்பு விளம்பரத்தில் தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 18 ஆட்சி மொழிகள் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், உலகின் மிக மூத்த மொழியாக கருதப்படும் செம்மொழியான தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வடிவமைப்பாளரின் தவறுவலால் ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்