Published : 04,Oct 2017 08:23 AM
பண மதிப்பிழப்பு ஒரு தற்கொலை நடவடிக்கை: பாஜக முன்னாள் அமைச்சர் விமர்சனம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தற்கொலை போன்றது என்றும் அதற்காக அரசு தரப்பில் கூறிய காரணங்கள் அனைத்து சிதைந்துவிட்டது என்றும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அருண் சோரி, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார். மேலும் திட்ட கமிஷனின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
இது குறித்து என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்தபோது அரசு தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் என்ன ஆயிற்று? கருப்பு பணம் எங்கே? வெள்ளையாக மாறிவிட்டதா? தீவிரவாதம் என்ன ஆயிற்று? தீவிரவாதிகள் இன்னும் நாட்டிற்குள் வருகிறார்கள். கடைசியில் ஒன்றுமே நடக்கவில்லை. இது உங்களுடைய தைரியான தற்கொலை நடவடிக்கைதான். தற்போது ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யாருடைய ஆலோசனைகளையும், உண்மைகளையும் கேட்க தயாராக இல்லை” என்று கூறியுள்ளார்.