Published : 14,Mar 2023 06:52 AM

சேலம் சிறையில் மலர்ந்த நட்பால் வேலூர் சிறைக்குச் சென்ற கொள்ளையர்கள் - சிக்கியது எப்படி?

3-thefts-arrested-for-robbing-jewel-who-become-friends-in-Jail
சிறையில் ஏற்பட்ட நட்பால் கூட்டாக சேர்ந்து வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 சவரன் நகையை பறிமுதல் செய்து வேலூர் தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாநகராட்சி தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (30). இவர் கடந்த ஏழாம் தேதி வேலப்பாடியில் உள்ள இந்தியன் வங்கியில் தனக்கு சொந்தமான 15 சவரன் நகையை அடமானம் வைக்க வந்துள்ளார். அப்போது வங்கிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தின் மீது நகை பையை வைத்துவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் நகை பையை பறித்துக்கொண்டு தப்பியபோது வேலூர் எஸ்பி பங்களா அருகே அவர்களின் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. பின்னர் அவர்களை பிடிக்க முயன்ற பொதுமக்களை கற்களால் தாக்கிவிட்டு இரண்டு இளைஞர்கள் தப்பி ஓடி உள்ளனர். 
image
லோகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வேலூர் தெற்கு காவல்துறையினர் இச்சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மூன்று பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(37), சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (23), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் (23) ஆகிய மூன்று பேரை கைதுசெய்த வேலூர் தெற்கு காவல்நிலைய குற்றப்பிரிவு காவலர்கள் அவர்களிடமிருந்து 5.5 சவரன் தங்க நகை மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
image
வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்களும் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவராக இருந்தபோதும், இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர்கள் மூவரும் சேலம் மத்திய சிறையில் இருந்தபோது இவர்களிடையே நட்பு ஏற்பட்டு அதன் அடிப்படையில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.