Published : 11,Mar 2023 08:03 PM

அய்யலூர்; ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தவர்களை இழுத்துச்சென்ற போலீசார்

Police-dragged-people-who-opposed-to-demolish-Occupied-buildings-at-Vedasandur

வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் இழுத்துச்சென்று அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும், சர்வீஸ் சாலையிலும் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களை கட்டியுள்ளனர். இதனால் அய்யலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனர். எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அய்யலூர் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையில் வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை 6 நாட்களுக்குள் தாங்களாகவே அகற்றவேண்டும் என்று கட்டட உரிமையாளர்களுக்கு கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கினர்.

image

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் செந்தில்குமார் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு கிளம்பும் என்பதால் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி, வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அய்யலூரில் குவிக்கப்பட்டனர்.

image

அதனைத்தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நடந்தது. அப்போது ஆக்கிரமிப்பு செய்த இடத்தின் உரிமையாளர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால், அவர்களை போலீசார் அங்கிருந்து இழுத்துச்சென்று அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அனைத்தையும் இடித்து அகற்றினர். அக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அய்யலூரில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்