Published : 06,Mar 2023 08:08 AM

சிதம்பரம்: கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

Chidambaram-What-happened-to-two-youths-who-were-bathing-in-the-sea

சிதம்பரம் அருகே கடலில் குளித்தபோது இரண்டு இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் நேற்று பரங்கிப்பேட்டை கடற்கரையோர பகுதிக்கு பொழுது போக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்களில் சிலர் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அன்னப்பன்பேட்டை கடற்கரையில் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரைச் சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் ஹித்தேஸ்வரன் (21), கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் பிரசாத் (33) ஆகிய இருவரும் திடீரென அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர்.

image

இதையடுத்து அங்கிருந்தார்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிய ஹித்தேஸ்வரன் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்