Published : 26,Feb 2023 10:04 PM

"அம்ரித்பால் சிங்குக்கு எதிராக பேசக் கூடாது”-பஞ்சாப் காங். எம்.பியின் புகாரும் பின்னணியும்

Congress-leader-receives-threat-call-asked-to-stop-speaking-against-Amritpal-Singh

தனக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து போனில் கொலை மிரட்டல் வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் லூதியானா எம்பி ரவ்னீத் சிங் பிட்டு.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அம்ரித்பால் சிங், தன்னை காலிஸ்தான் ஆதரவாளர் என்றும் காலிஸ்தான் தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பிந்தரன்வாலேயின் ஆதரவாளர் என்றும் கூறிக் கொள்கிறார். மேலும் இவர் மத போதகர் என்ற அவதாரத்துடன் வலம் வருகிறார். அம்ரித்பால் சிங் சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ் பெற்றவர். சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ''இந்திரா காந்திக்கு ஏற்பட்ட கதிதான், அமித் ஷாவுக்கும் ஏற்படும்'' என்று அவர் கூறினார். மேலும் கடந்த வாரம் அம்ரித்பால் சிங் தனது ஆதரவாளர்களை விடுவிக்கக் கோரி வாள், துப்பாக்கிகளுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டார்.

image

இச்சூழலில், அம்ரித்பால் சிங்-க்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லூதியானா நாடாளுமன்ற உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு அவ்வப்போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், தனக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து போனில் கொலை மிரட்டல் வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் லூதியானா எம்பி ரவ்னீத் சிங் பிட்டு. "அம்ரித்பால் சிங்குக்கு எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும்  இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றும் சர்வதேச எண்ணிலிருந்து பேசியவர்கள் மிரட்டல் விடுத்ததாக ரவ்னீத் சிங் பிட்டு கூறியுள்ளார். 

1995ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன்தான் ரவ்னீத் சிங் பிட்டு ஆவார். இவர் தற்போது மூன்றாவது முறையாக எம்.பி. பதவியில் உள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்