Published : 13,Feb 2023 07:03 PM
”எங்கள ஏன் வெளியேத்துறீங்க?”..கண்ணீர் விடும் மக்கள்; டெல்லி துக்ளகாபாத்தில் நடப்பது என்ன?

டெல்லியில் உள்ள துக்ளகாபாத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படும் சூழலிலும், அவர்களின் வீடுகள் இடிக்கப்படும் நிலையிலும், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். துக்ளகாபாத் பகுதியில் என்னதான் நடைபெறுகிறது? மக்கள் இவ்வளவு அச்சம் கொள்ள என்ன காரணம்? இதில் இந்து - முஸ்லீம் சிக்கல் எங்கிருந்து வருகிறது? என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
டெல்லி துக்ளகாபாத் நகரம்
இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கிறது, தலைநகர் டெல்லியில் உள்ள துக்ளகாபாத். இந்த துக்ளகாபாத் நகரம், 14ஆம் நூற்றாண்டில் துக்ளக் வம்சத்தை நிறுவிய கியாசுதீன் துக்ளக்கால் கட்டப்பட்ட துக்ளாபாத் கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படும் சூழலிலும், அவர்களின் வீடுகள் இடிக்கப்படும் நிலையிலும் இருப்பதுதான் இன்றைய பரபரப்பு செய்தியாக இருக்கிறது.
ஆக்கிரமிப்புகளை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு
துக்ளாபாத்தில் உள்ள சூரியா மொஹல்லா என்ற ஒரு காலனி பகுதிதான் இந்தப் பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. இப்பகுதியில் வங்காளிகள் அதிக அளவில் வசிப்பதால், இது ’வங்காள காலனி’ என அழைக்கப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள அனைத்து காலனிகளும் ஜாட் மொஹல்லா, கும்ஹர் மொஹல்லா, ஜாதவ் மொஹல்லா, குஜ்ஜர் மொஹல்லா, வால்மீகி மொஹல்லா என சாதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது. 15 நாட்களுக்குள் இக்காலனியில் இருக்கும் மக்கள், தங்கள் உடைமைகளுடன் வெளியேற வேண்டும் என கடந்த ஜனவரி 11 அன்று எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே அந்த காலனி மக்களிடம் பயம், பதற்றம், பரிதவிப்பு எல்லாம் சேர்ந்துகொண்டுள்ளது.
தொல்லியல் துறை அறிவிக்கக் காரணம் என்ன?
”வரலாற்றுச் சிறப்புமிக்க துக்ளகாபாத் கோட்டை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தவறவிடப்பட்டதால், தற்போது சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் அந்தக் கோட்டை வளாகத்திற்குள் நுழைந்து தங்கள் வீடுகளைக் கட்டியுள்ளனர்" என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, ”இனிமேல் அந்தப் பகுதியில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் நடைபெறக்கூடாது” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
என்றாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத அப்பகுதிக்கு புதிதாய் இடம்பெயர்ந்த நபர்கள் தொடர்ந்து வீடுகளை எழுப்பி வந்திருக்கின்றனர். தொடர்ந்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், கடந்த 2022 நவம்பர் மாதம், துக்ளகாபாத் கோட்டையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 6 வாரம் அவகாசம் வழங்கியது. இதையடுத்தே, அந்த 15 நாள் எச்சரிக்கை நோட்டீஸ், காலனி மக்களிடம் வழங்கப்பட்டது. இதனால்தான் அந்த மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
”பணம் கொடுத்து வாங்கியிருக்கிறோம்; சும்மா இல்லை”
இதுகுறித்து அப்பகுதி மக்கள், “நாங்கள் அனைவரும் இங்கு 20-30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இவ்விடம் எங்களுக்கு இலவசமாக வழங்கப்படவில்லை. ஒவ்வொருவரும் பல லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்கியிருக்கிறோம். இந்த நிலத்தை வாங்குவதற்காக கோட்டை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் பணம் கொடுத்துள்ளோம். இங்கு வீடு கட்டுவது சட்டவிரோதம் என்றால், அப்புறம் ஏன் அவர்கள் எங்களிடம் பணம் பறித்தார்கள்? தவிர, இங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கு பணம் கட்டி ரசீது பெற்று வருகின்றனர். துக்ளகாபாத் கோட்டை இடிந்து கிடப்பதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் கோட்டையின் எல்லைச் சுவரில் இருந்து 200-300 மீட்டர் தொலைவில் இருக்கிறோம். நாங்கள், எங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். கோட்டைக்குள் செல்வதில்லை” என்கின்றனர்.
மெளனம் காக்கும் பாஜகவினர்
மேலும் சிலர், “டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றிபெறவில்லை. இதனால் பாஜக எங்கள்மீது வெறுப்பில் உள்ளது. இதையடுத்தே இந்த நடவடிக்கையை தொடர்ந்துள்ளது. ஆனால், நாங்கள் பல ஆண்டுகளாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட்டு வருகிறோம். அந்த வாக்குச் சதவிகிதம் ஆம் ஆத்மிக்கு எதிராக நகராட்சித் தேர்தலிலேயே எதிரொலித்தது. இந்தப் பகுதியில் இருந்து ரமேஷ் பிதுரி என்பவர் 3 முறை பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
தற்போதுகூட அவர் தெற்கு டெல்லியின் எம்பியாக உள்ளார். அவரிடம் இதுதொடர்பாக முறையிட்டுப் பார்த்தோம். அவர் எந்த உதவியும் செய்யவில்லை. அவர் மட்டுமல்ல, பாஜகவினர் பலரும் இந்த விஷயத்தில் மெளனம் காக்கின்றனர். ரமேஷ் பிதுரியின் வீடும் இங்கேதான் உள்ளது. அவர், எங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார் என்றுதான் நாங்கள் இங்கு வந்தோம். எங்களை வெளியே போகச் சொன்னால், அவரும் வீட்டை காலி செய்ய வேண்டும். அதேநேரத்தில், இந்த விஷயத்தில் எங்களுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளனர்” என்கின்றனர்.
”எங்களை ஏன் வெளியேற்ற நினைக்கிறீர்கள்?”
மேலும் அவர்கள், “கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜஹாங்கிர்புரியில் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இதற்குக் காரணம் பாஜகதான் என ஆம் ஆத்மி கட்சி கூறியது. அப்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது அவர்களைப்போல் எங்களையும் வெளியேற்ற நினைக்கிறார்கள். ஆனால், துக்ளகாபாத்தில் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் வசிக்கின்றனர். அதேநேரத்தில், சில மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் இங்கு வந்து வசிக்கின்றனர். அவர்களைக் குறிவைத்துத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்கள் யார் என விசாரித்து அவர்களை மட்டும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ’PM-UDAY மூலம் அங்கீகரிக்கப்படாத நிலங்களில் வசிக்கும் டெல்லி குடியிருப்பாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து உரிமையைப் பெறலாம்’ என வாக்குறுதி தரப்பட்டது. அப்படியெனில் அது வெற்று வாக்குறுதியா?” என்கின்றனர்.
”விஷம் கொடுத்தே சாகடிக்கலாம்”
அந்த காலனியில் வசிக்கும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள், “இங்கு வசிக்கும் பலர், வங்காள முஸ்லிம்கள் ஆவர். எங்களுக்கு இந்த நிலத்தின்மீது உரிமை உண்டு. ஆனால், இப்பகுதி மக்களும் கட்சிகளும்தான் எங்கள் மீது குறிவைத்துள்ளனர். குறிப்பாக வங்காள முஸ்லிம்களைக் குறிவைத்துள்ளனர். இங்கு, எந்த நிலத்தையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களுக்கும் இங்கு உரிமையுண்டு. நாங்களும் இங்கு இடத்தை வாங்குவதற்குப் பணம் கொடுத்துள்ளோம். இப்பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மையளவில் இருந்தாலும் நாங்களும் கணிசமான அளவிலும் இருக்கிறோம். அதற்கு மேலும் இந்த இடத்தைவிட்டு எங்களை அகற்ற விரும்பினால் அவர்கள் எங்களுக்கு விஷம் கொடுத்தே சாகடிக்கலாம்” என்கின்றனர்.
அதேநேரத்தில், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்ட போதிலும், இன்னும் அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்படவில்லை. அதேநேரத்தில் அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றையும் நடத்த வேண்டும் எனவும் டெல்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை அம்மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
”முதலில் அவர்களை வெளியேற்றுங்கள்”
“இந்த நிலத்தை நாங்கள் 15 வருடத்திற்கு முன்பு இங்கிருந்த உள்ளூர்வாசிகளிடம் இருந்து காவல்துறை முன்னிலையில் பணம் கொடுத்து வாங்கினோம். எங்களுடைய பிள்ளைகள் இங்கு படித்து வருகிறார்கள். இங்கிருந்து தற்போது வெளியேறிவிட்டால் நாங்கள் எங்கே செல்வது. நாங்கள் இங்கே பங்களா கட்டவில்லை. வெறும் இரண்டு அறைகள் கொண்ட செட் தான் போட்டிருக்கிறோம். எங்கள் குடும்பத்தின் 4 பேர் இதில் வசித்து வருகிறோம். அந்த பணத்தை மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்தோம். என்னுடைய கேள்வி என்னவென்றால்? நாங்கள் ஏன் இங்கிருந்து வெளியேற வேண்டும்?. எங்களுக்கு வீடுகளை விற்றவர்களை முதலில் வெளியேற்றுக்கள். “ என்று வீட்டு வேலை செய்யும் சுமன் என்பவர் கூறுகிறார்.
நீதிமன்ற உத்தரவுப்படியே நடவடிக்கை
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை, “நீதிமன்ற உத்தரவுப்படியே நாங்கள் இந்தப் பகுதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தப் பகுதி மக்கள் அதிகாரப்பூர்வமாக இடம் வாங்கியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அதனாலேயே இங்கு வீடுகள் கட்டக்கூடாது என அவர்களுக்கு தெரியப்படுத்தி வந்தோம். இப்போது நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். அவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்து அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் நலனில் நடவடிக்கை தேவை
இதற்கிடையே இந்திய தொல்லியல் துறைக்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான டெல்லி ஆணையம் (டிசிபிசிஆர்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ”காலனிகளில் வசிக்கும் பல பெண்கள் கர்ப்பமாக உள்ளனர். அவர்கள் தற்போது அங்கிருந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. ஆகவே, அவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சரியான மறுவாழ்வு கிடைக்காமல், அங்கிருந்து வெளியேற்றுவது என்பது மனித உரிமைகளை மீறுவதாகும். ஆகவே, குழந்தைகளின் நலனை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஜெ.பிரகாஷ்