Published : 08,Feb 2023 08:41 AM
இல்லாத ஜன்னலுக்கு எக்ஸ்ட்ரா டிக்கெட் வேற... பிரிட்டிஷ் ஏர்வேஸால் கடுப்பான பயணியின் ட்வீட்!

பயணங்களின் போது எவருக்குமே பிடித்தமானதாக இருப்பது ஜன்னலோர இருக்கைதான். காற்றாட வேடிக்கை பார்த்துக்கொண்டே போவதை சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை எவருமே விரும்புவார்கள். முன்பதிவு செய்யப்படாத போக்குவரத்துகளை பயன்படுத்தும்போது எப்படியாவது ஜன்னல் சீட்டை பிடித்திட வேண்டும் என பலரும் முற்படுவதும் உண்டு. இதுவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டாக இருந்தால் என் காட்டுல நான்தான் ராஜா என்ற மனநிலையிலேயே இருப்பார்கள்.
ஆனால் அனிருத் மிட்டல் என்பவருக்கு அந்த நல்வாய்ப்பு கூடுதலாக பணம் கட்டியும் கிட்டாமல் போனது அவருக்கு பெரும் வருத்தத்தையும் கடுப்பையுமே கொடுத்திருக்கிறது. இது தொடர்பான நிகழ்வை போட்டோவோடு அனிருத் ட்விட்டரில் பதிவிட்டது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.
I paid extra for a right side window seat because it's supposed to be beautiful when you land into Heathrow.@British_Airways where's my window yo? pic.twitter.com/2EBYlweAfW
— Anirudh Mittal (@dhumchikdish) February 5, 2023
தானாக ஜன்னலோர சீட் கிடைத்தால் எந்த அளவுக்கு சந்தோஷம் இருக்குமோ, அதே அளவுக்கு ஜன்னலோர சீட்டுக்காக கூடுதலாக பணம் கட்டியும் கிடைக்காமல் போனால் கோபமும், அதிருப்தியும் கட்டுப்படுத்த முடியாததாகவே இருக்கும். ஏனெனில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது சுற்றியிருக்கும் அழகியலான நிலப்பரப்பை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே அனிருத் மிட்டல் பிரிட்டிஷ் ஏர்வேஸில் டிக்கெட் புக் செய்திருக்கிறார்.
ஆனால் விமானத்துக்குள் சென்ற அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது, அனிருத் மிட்டல் முன்பதிவு செய்திருந்த அந்த ஜன்னலோர சீட்டில் ஜன்னலுக்கு பதில் வெறும் சீட் மட்டுமே இருந்திருக்கிறது. இதனால் கடுப்பான அவர், “என்னுடைய ஜன்னலோர இருக்கை எங்கே?” எனக் கேள்வி எழுப்பி பிரிட்டிஷ் ஏர்வேஸை டேக் செய்து ஃபோட்டோவையும் இணைத்திருக்கிறார் அனிருத்.
Here, you can have mine lol. Same flight pic.twitter.com/QFeGBoz93a
— Yoshi (@YoLyristis) February 6, 2023
இந்த ட்விட்டர் பதிவு நான்கு லட்சத்துக்கும் மேலானோரின் கவனத்தை பெற்றிருக்கும் நிலையில், “நான் கேட்டதற்கு பதில் எங்கே?” என பிரிட்டிஷ் ஏர்வேஸை மீண்டும் டேக் செய்திருக்கிறார். அனிருத்தின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் பலவாறு கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
அதில் ஒருவர், “எனக்கும் இதேபோல நடந்திருக்கிறது” என்றும், “அதே ஃப்ளைட்டில்தான் நானும் இருந்தேன். இதோ நான் எடுத்த வீடியோவையும் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.
Someone tried to open it, so they permanently shut it down.
— RahlS_2017 (@RSu27738855) February 6, 2023