Published : 06,Feb 2023 05:13 PM

தூக்கத்திலேயே உறைந்த உயிர்கள்..மீளா துயரில் துருக்கி, சிரியா-நிலநடுக்கத்தால் 1300 பேர் பலி

Over-1300-killed-by-Turkey---Syria-earthquake--After-Shock-happened-over-there-again

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது. 

துருக்கி நாட்டில் இன்று அதிகாலை காசியான்தெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவான அதிபயங்கர நில நடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நூறாண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இது மிகவும் சக்திவாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

image

மேலும் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது.

image

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் முக்கிய நகரங்கள் உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது. அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே afer shock என்று சொல்லக்கூடிய வலுவான நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டதால்தான் உயிரிழப்பு இந்த அளவுக்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

image

துருக்கியில் உயிரிழப்பு எண்ணிக்கை 912ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சிரியாவிலும் கட்டடங்கள் இடிந்துவிழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும்பாலானவர்கள் உறக்கத்திலேயே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

image

இந்நிலையில், துருக்கி, சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6-ஆக பதிவாகியுள்ளது. துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். துருக்கியின் எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் உயிரிழப்பு மீண்டும் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்நிலையில் துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், “துருக்கி - சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்தக் கடினமான நேரத்தில் சிரிய நாட்டு மக்களுக்கு தேவையான உதவி மற்றும் ஆதரவை வழங்க வழங்க தயாராக இருக்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்