Published : 05,Feb 2023 09:46 PM
6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் வீரர் சாதனை! எந்த போட்டியில் தெரியுமா?

பாகிஸ்தானில் நடைபெற்ற காட்சி போட்டி (exhibition match) ஒன்றில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியைச் சார்ந்த இப்திகார் அகமது, ஆறு பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து இன்று சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஆண்டுக்கானப் போட்டிகள் வரும் பிப்ரவரி 13 தொடங்க உள்ளன. இந்த நிலையில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஷல்மி அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாபர் அசாமின் பெஷாவர் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சர்பராஸ் அஹமதுவின் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. இதில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் இப்திகார் அகமது பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். இறுதியில் இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய பெஷாவர் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
— Pakistan Cricket (@TheRealPCB) February 5, 2023
Iftikhar goes big in the final over of the innings!
Watch Live https://t.co/xOrGZzkfvlpic.twitter.com/CDSMFoayoZ
இந்த பயிற்சி ஆட்டத்தின்போது, போட்டி நடைபெற்ற நவாப் அக்பர் புக்தி மைதானத்துக்கு அருகே குண்டு வெடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இங்கு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முன்னாள் வீரர் ஷஹீத் அஃப்ரிடி உள்ளிட்ட அந்நாட்டு வீரர்கள் பலரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போட்டி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மேற்கிந்திய வீரர்கள் பொல்லார்டு, மால்கம் நாஷ், இந்திய வீரர்கள் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் மற்றும் ஜாஸ்கரன் மல்கோத்ரா உள்ளிட்ட வீரர்கள் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தவர்கள் ஆவர்.