Published : 31,Jan 2023 07:15 AM

பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட நாகை காங்கிரஸார்; எதிர்த்து பாஜகவினர் சாலைமறியல்!

bjp-opposed-screening-bbc-documentary-by-congress-at-nagapattinam

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி செய்தி நிறுவனமான BBC ஆவணப்படம் தயாரித்திருக்கிறது. இதனை இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனிய ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் சொல்லி அதனை திரையிடவும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் குஜராத் கலவரத்தை அந்த மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகளால் நடத்தப்பட்டது என எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகத்தான் பிபிசியின் ஆவணப்படத்தை திரையிட மத்திய அரசு எதிர்க்கிறது எனக் குறிப்பிட்டு நாடு முழுவதும் எப்படியாவது அந்த ஆவணப்படத்தை திரையிட முற்பட்டு வருகின்றனர்.

image

அந்த வகையில், நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நாகை அபிராமி சன்னதி திடலில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதனை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூடி நின்று பார்த்தனர். இதனையடுத்து அங்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையிலான அக்கட்சியினர் ஆவணப்படத்தை திரையிடக் கூடாது என காங்கிரஸாரை எச்சரித்திருக்கிறார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே அங்கேயே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்து நாகை துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிரடி படையினர் 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்து வந்து பாஜகவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

image

அதன் பிறகு, ஆவணப்பட திரையிடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு திரைகளையும் போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் பாரத் மாதா கி ஜே என பாஜகவினர் முழக்கமிட, காங்கிரஸாரோ மகாத்மா காந்தி புகழ் ஓங்குக என எதிர் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவவே அங்கே கூடியிருந்த பாஜகவினரை கலைந்துச் செல்லக் கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்