Published : 25,Jan 2023 03:16 PM

”அஸ்வின் பந்தை எதிர்கொள்வது கடினம்”.. ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு சகவீரர் விடுத்த எச்சரிக்கை!

Ashwin-is-tough-to-face-the-ball----Teammate-warns-Australian-batsmen-

”இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்தை எதிர்கொள்வது கடினம்” என ஆஸ்திரேலிய பேட்டர் மேட் ரின்ஷா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுவதுமாக வென்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்து இவ்விரு அணிகளுக்கான டி20 தொடர் நடைபெற இருக்கிறது.

image

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்

இந்தத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இதன் முதல் போட்டி அடுத்த மாதம் 9ஆம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளது. இதற்காக ரோகித் சர்மா தலைமையில் வலுவான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல், ஆஸ்திரேலிய அணியிலும் திறமையான வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதனால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெற்றார். அவருடைய சுழல் பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவ்வணியின் பேட்ஸ்மேன் மேட் ரின்ஷா தெரிவித்துள்ளார்.

அஸ்வினை எதிர்கொள்வது கடினம்

இதுகுறித்து அவர், “டெஸ்ட்டைப் பொறுத்தவரை இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர் அஸ்வின். அவர், டெஸ்ட்டில் 200 இடதுகை பேட்டர்களை வீழ்த்திய முதல் பவுலர் என சாதனை படைத்திருக்கிறார். தற்போதைய ஆஸ்திரேலியா அணியில் ஆறு இடதுகை பேட்டர்கள் உள்ளனர். இதனால் அவருடைய பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். அஸ்வினை எதிர்கொள்வது மிகவும் கடினம். தவிர, அவர் ஒரு திறமையான பந்துவீச்சாளர். விதவிதமாய்ப் பந்துகளை வீசி நம்மை நெருக்கடிக்கு ஆளாக்குவார்.

image

பந்தை எப்படிச் சுழலவிட வேண்டும் என அவருக்கு நன்றாகத் தெரியும். அதேநேரத்தில், அவரது ஓவரை கொஞ்சம் தாக்குப் பிடித்தால் போதும், பிறகு சுலபமாக விளையாடலாம். பொதுவாக, ஆப் ஸ்பின்னர்கள் இடதுகை பேட்டர்களுக்கு பந்து வீசும்போது அதிக முறை எல்பிடபிள்யூ ஆக வாய்ப்பு இருக்கிறது. பந்து திரும்பும் என நினைத்து இடதுகை பேட்டர்கள் விளையாடும்போது அது நேராக வந்து காலில் பட்டு எல்பிடபிள்யூ ஆகிவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அதனை எப்படி தடுப்பது என்று எதிர்பார்த்து விளையாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அஸ்வினின் ஐடியாக்களை முறியடிப்பேன்

அதேநேரத்தில் இந்த முறை அஸ்வினை வென்று காட்ட இருப்பதாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”கடந்த டெஸ்ட் தொடரில் இருந்தே நான் அஸ்வின் குறித்து யோசிக்கத் தொடங்கிவிட்டேன். அஸ்வின் எப்படி பந்துவீசுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே இந்த முறை எனது ஆட்டத்தில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறேன். அஸ்வினின் ஐடியாக்களை முறியடிக்க நிறைய யுக்திகளை கையில் வைத்துள்ளேன்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

image

போட்டி விவரம்:

முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்பூர்
2வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21, டெல்லி
3வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா
4வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தே உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

image

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித் (துணை கேப்டன்), மார்னஸ் லபுஷேன், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், அலேக்ஸ் கேரி, போலாந்த், ஆஸ்டன் ஆகர், டேவிட் வார்னர், கேமரூன் கிரீன், பீட்டர் ஹேன்ட்ஸ்ஹோம், டிராவிட் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் லைன், லான்ஸ் மோரிஸ், டோட் மர்பி, மேட் ரின்ஷோ, மிட்செல் ஸ்விப்சென்.

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்