Published : 25,Jan 2023 02:18 PM

`எந்த சட்டம் இதை சொந்த முடிவென சொல்கிறது?’- 8 வயதில் துறவறம் பூண்ட சிறுமிக்கு எதிர்ப்பு

An-8-year-old-girl-who-took-to-asceticism----protest-started-

குஜராத்தில் எட்டு வயது சிறுமி துறவறம் மேற்கொண்டதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வைர வியாபாரியின் மகள்

குஜராத் மாநிலம் சூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வைரம் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் ’சங்வி அன்ட் சன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரான தனேஷ் சங்வியின் மூத்த மகள் தேவன்சி சங்வி. இவர், கடந்த வாரம் துறவற வாழ்க்கையை ஏற்றார். 8 வயதான இந்தச் சிறுமி துறவற வாழ்க்கையை ஏற்றதுதான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. காரணம், இன்னும் குழந்தைமையே போகாத இச்சிறுமி சன்னியாசம் என்ற மிகப்பெரிய விஷயத்தை பற்றி எப்படி தீர்க்கமாக முடிவெடுக்க இயலும் என்ற கேள்விதான். இதன் காரணமாக இவர் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. மேலும் இன்னும் 10 வருடங்களில், சிறுமி விரும்பினால் மிகப்பெரிய வைர விற்பனை அதிபராகும் அளவுக்கு அவருக்கு சூழல்கள் இருக்குமென்பதால், ஏன் இப்போது இவர் இதை தேர்ந்தெடுக்க வேண்டுமென பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

image

சிறுமி எடுத்த உறுதியான முடிவு

தேவன்சியின் சுய விருப்பத்தின் பேரில் இந்த துறவற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறும் அவரின் பெற்றோர், மேற்படி நீண்ட ஆன்மிகப் பயணத்தின் மூலம் அதனை தேவன்சி உறுதி செய்ததாகவும் தெரிவிக்கின்றனர். துறவற வாழ்க்கையின் அனைத்துச் சிரமங்களையும் இந்தப் பயணம் தேவன்சிக்கு உணர்த்திய பின்னரும், அவர் பிடிவாதமாகச் சன்னியாச முடிவை எடுத்திருப்பதாகவும், இதுவரை 367 சன்னியாச தீட்சை நிகழ்வுகளில் அவர் பங்கேற்று இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

“தேவன்சி ஒருபோதும் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததில்லை. அதுபோல் மால்கள், உணவகங்களுக்குச் சென்றதில்லை. சிறுவயதிலிருந்தே, தேவன்ஷி ஒருநாளைக்கு மூன்று முறை பிரார்த்தனை செய்து வருகிறார். அவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே ஓர் உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளார்” எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

image

இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தைச் சார்ந்த 12 வயது சிறுமியான குஷியும், துறவறம் பூண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறைக்கு ஜெயின் சமூகத்தில் ஆதரவு இருந்தாலும், குழந்தைகள் துறவறத்தை ஏற்றுக்கொள்வதற்கு மக்களும் குழந்தைகள் நல ஆர்வலர்களும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வாழ்க்கை மிகவும் கடினமானது

இதுகுறித்து சூரத்தைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்தவரும் வைர வணிகரும், தனேஷ் சங்க்வியின் குடும்ப உறுப்பினருமான கீர்த்தி ஷா தெரிவிக்கையில், “குறுநடை போடும் குழந்தையான அவர், இன்று ஆன்மிகப் பாதையை நோக்கிச் சென்றுள்ளார். அவர், இனி வீட்டில் தங்க முடியாது. அவருடைய பெற்றோர் இனி அவருக்கான பெற்றோர் அல்ல. ஏனெனில் அவர் தற்போது ஜெயின் மத கன்னியாஸ்திரி ஆகிவிட்டார். இந்த வாழ்க்கை மிகவும் கடினமானதாகும் அவருக்கு” என்றுள்ளார்.

image

மறுப்பு தெரிவித்த ஆணையம்!

மேலும் கீர்த்தி ஷா, “எந்த மதமும் குழந்தைகளை துறவிகளாக அனுமதிக்கக்கூடாது. அவள் ஒரு குழந்தை. அவளுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்? குழந்தைகளுக்கு கல்லூரியில் எந்தப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பது குறித்துக்கூட முடிவெடுக்க தெரியாது. அப்படியிருக்கையில் அவர்களின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி எப்படி முடிவெடுக்க முடியும்? உலகை துறக்கும் ஒரு குழந்தை தெய்வமாகி, சமூகம் கொண்டாடும்போது, அது அவளுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் குழந்தைகளுக்கு இந்த விஷயம் என்பது கொடுமையானது” என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் விளக்கி நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறார் அவர். ஆனால், ’இது மதம் மற்றும் அந்தக் குழந்தை சுயமாய் எடுத்த உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்’ எனச் சொல்லி ஆணையம் மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

image

குழந்தைகளின் உரிமை மீறல்

மும்பையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகரான பேராசிரியர் நிலீமா மேத்தா, “குழந்தை, தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே துறவறத்தை ஏற்கிறது என்கிறார்கள். ஆனால், இதற்கு சட்டத்தில் இடமில்லை. சட்டப்பூர்வமாகப் பார்த்தால், ஒருவர் 18 வயதிலேயே சுயமான முடிவை எடுக்க முடியும். அதுவரை, அந்தக் குழந்தையின் முடிவுகளில் பெற்றோரே தலையிட முடியும். ஆகையால், இந்த விஷயத்திலும் குழந்தையின் நலன் குறித்து பரிசீலிக்க வேண்டும். குழந்தையின் கல்வி மற்றும் கனவுகளைப் பறித்தால், அது அவளுடைய உரிமைகளை மீறுவதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

துறவற வாழ்க்கையும் மாறும்!

பேராசிரியையான மேத்தா, “குழந்தைகள் எல்லா மதங்களின் அடிப்படையிலும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இதைக் கட்டாயமாக்குவது தவறு. அதேநேரத்தில், இளம்வயது மனங்கள் ஈர்க்கக்கூடியவை. சில ஆண்டுகளுக்குப் பிறகு இது நான் விரும்பிய வாழ்க்கை அல்ல என்றுகூட அவர்கள் நினைக்கலாம். பெண்கள் வளர்ந்தவுடன் மனம் மாறிய நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு துறவறத்தை ஏற்ற ஓர் இளம்பெண், அதிலிருந்து விலகி ஓடிப்போனார்.

image

அதுபோல் 9 வயதில் துறவறத்தை மேற்கொண்ட சிறுமி ஒருவர், தன்னுடைய 21 வயதில், அதாவது 2009ஆம் ஆண்டு தனது காதலனை மணந்தார். இதுபோன்ற சம்பவங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்” எனவும் மேத்தா தெரிவிக்கிறார். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஆதரவு தெரிவித்த பேராசிரியர்!

அதேநேரத்தில் மும்பை பல்கலைக்கழகத்தில் ஜெயின் மதம் குறித்து பாடம் நடத்தும் பேராசிரியர் டாக்டர் பிபின் தோஷி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இகுறித்து அவர், ”ஆன்மீகத்தில் சட்டத்தைத் திணிக்க முடியாது. குழந்தைகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடையவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த அறிவார்ந்த திறன்களைக் கொண்ட குழந்தைகள், தன்னுடைய சிறுவயதிலேயே பெரியவர்களைவிட அதிக திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

image

அதேபோல், ஆன்மீக நாட்டமுள்ள குழந்தைகளும் உள்ளனர். ஆகையால், அவர்கள் துறவறம் மேற்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் வழக்கமான பொழுதுபோக்குகளை இழக்கலாம். உண்மையில் அது, அவர்களுக்கு அவசியமாகப்படவில்லை. அதற்காக அவர்கள், அன்பையோ அல்லது கல்வியையோ இழக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள், தன் குருவிடமிருந்து அன்பைப் பெறுகிறார்கள். தவிர, வேறு பலவற்றையும் குருவிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள்” என்கிறார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்