Published : 20,Jan 2023 10:38 PM

’ஜன.22-தான் நியூ இயர்’ - புத்தாண்டில் சீனர்கள் பின்பற்றும் 10 பாரம்பரிய பழக்கங்கள்!

Chinese-New-Year-2023--Know-the-facts-about-Chinese-new-year-and-rituals

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 12 மாத முடிவில் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். ஆனால் சீனர்களுடைய காலண்டரில் மொத்தம் 13 மாதங்கள். மேலும் அவர்கள் புத்தாண்டானது ஆண்டுதோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு சீனப் புத்தாண்டானது ஜனவரி 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவர்கள் பின்பற்றுகிற 10 பாரம்பரிய பழக்கவழக்கங்களை பார்க்கலாம். 

1. சீனாவின் விடுமுறை கொண்டாட்டங்களில் மிக முக்கியமான ஒன்று சீன புத்தாண்டு. உலகம் முழுவதுமுள்ள சீனர்கள் புத்தாண்டை மிகவும் ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

2. லூனார் காலண்டரை அடிப்படையாகக் கொண்டு புத்தாண்டு கணிக்கப்படுகிறது. பொதுவாக ஜனவரி 21 - பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி புது வருடம் பிறக்கிறது.

3. 12 ராசிக் குறிகள் கிரிகோரியன் நாட்காட்டியின் வெவ்வேறு மாதங்களுடன் தொடர்புடையது போலவே, சீன புத்தாண்டும் ராசிக்குறிகளுடன் தொடர்புடையது. உதாரணமாக 2022 சீன புத்தாண்டானது ‘புலி ஆண்டு’ என அழைக்கப்பட்டது. 2023ஐ ‘முயல் ஆண்டு’ என்கின்றனர். அதேபோல் 2024 ‘ட்ராகன் ஆண்டு’ எனவும், 2025ஆனது ‘பாம்பு ஆண்டு’ எனவும் அழைக்கப்படுகிறது.

4. சீன மக்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். நியான் என்ற அசுரன் லூனார் புத்தாண்டு தினத்தன்று தோன்றி மக்களையும் கால்நடைகளையும் சாப்பிட்டுவிடுவார் என்பது சீனர்களின் ஐதிகம். எனவே அதனை விரட்ட பட்டாசுகள் வெடித்தனர் எனவும், தற்போது அதனையே பாரம்பரியாக பின்பற்றுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

5. குறைந்தது 16 நாட்கள் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டும். இந்த வருடம் கொண்டாட்டங்கள் புத்தாண்டு தினத்தன்று தொடங்கி, இந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வரும் விளக்கு திருவிழாவில் முடிவடையும்.

image

6. புத்தாண்டு தொடங்கி முதல் 5 நாட்களுக்கு குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது என்பதை சீனர்கள் வழக்கமாக பின்பற்றுகின்றனர். ஏனெனில் இந்த நாட்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் செல்வம் சேர்வதற்கு அடையாளமாக இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால அவற்றை யாரும் குப்பையில் போடக்கூடாது என்பது சீனர்களின் நம்பிக்கை.

7. 6ஆம் நாளானது சுத்தம் செய்தலுக்கென்றே ஒதுக்கப்படுகிறது. அந்த நாளில் குப்பைகளை சுத்தம் செய்து கெட்ட சகுனங்களை வெளியே அனுப்புவர்.

8. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குடும்பத்தில் இளையவர்களுக்கு சிவப்பு நிற கவர்களில் பணத்தை பரிசாக அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் சீனர்கள். கொண்டாட்டத்தின்போது ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்வதும் இங்கு வழக்கம்.

9. சீன மக்கள் சிவப்பு உடை அணிவதுடன் வீடுகளையும் சிவப்பு நிறத்தால் அலங்கரிப்பர். சிவப்பு நிறத்தை செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை குறிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

10. சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் இறுதி விழாவாக விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. தெருக்கள், வீடுகளின் வெளிப்புறம் மற்றும் பொது இடங்களில் சிவப்பு நிற விளக்குகளை மக்கள் தொங்கவிடுவர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்