Published : 12,Jan 2023 01:39 PM
”அச்சுறுத்தவே அப்படி செய்தேன்” - இன்டர்சிட்டி ரயிலில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் கைது

கோவையிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பி பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
கோவையிலிருந்து மதுரைக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக ரயில்நிலைய காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது, அந்த ரயில் மதுரை சென்றடைந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி அது வெறும் புரளி என்று உறுதி செய்தனர். இதுதொடர்பாக செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போஸ் என்ற நபரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் அதே ரயிலில் பயணம் செய்ததாகவும், அருகில் அமர்ந்து பயணம் செய்தவர்களுடன் தகராறு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
இதனால் சக பயணிகளை அச்சுறுத்தும் நோக்கிலும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும் அவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.