Published : 13,Dec 2022 10:52 AM

ஹிஜாப் போராட்ட நீட்சி... 4 நாள் இடைவேளிக்குள் இருவரை பொதுவெளியில் தூக்கிலிட்ட ஈரான் அரசு

Iran-publicly-carries-out-second-protest-related-execution

ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில், இரண்டாவதாக ஒருவரை தூக்கிலிட்டிருப்பதை உறுதிசெய்திருக்கிறது அந்நாட்டு நீதித்துறை. இதற்கு முன் 23 வயதான மோஷன் சேகரி என்பவரை கடந்த வியாழக்கிழமை தூக்கிலிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இரண்டாவது நபர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டதாகட் தற்போது தகவல்கள் வெளியாகின்றன.

ஈரானில் 21 வயதான மாஷா அமினி என்ற பெண்ணை, சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி ஈரானின் அறநெறி காவல்துறை சில மாதங்களுக்கு முன் கைது செய்திருந்தது. அதன்பின் அவர் மர்மமான முறையில் இறந்தார். மாஷா, அறநெறி காவலர்களால் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து ஈரானில் பெண்களும் செயற்பாட்டாளர்களும் மாஷாவுக்காக குரல் கொடுத்தனர்; மேலும் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்று போராடினர்.

image

இந்தப் போராட்டத்திற்கு ஈரான் மட்டுமன்றி உலகம் முழுவதுமிருந்து ஆதரவுகள் குவிந்தன. இருப்பினும் கூட ஈரானில் அரசு மக்கல் கோரிக்கைக்கோ, பெண்களின் குரலுக்கோ செவிசாய்க்காமல் இருந்தது. இதனால் போராட்டம் இன்னும் அதிகமானது. இதில் போராட்டத்தின் போது சுமார் 450 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் கூறின.

image

இப்படியான சூழலில்தான் நேற்று இதுதொடர்பாக ஈரான் நீதித்துறையின் செய்தி இணையதளத்தில் போராட்டத்திலிருந்த ஒருவர் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இணையதளத்தின்படி, இரண்டு பாசிஜ் பாதுகாப்புப் படை உறுப்பினர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மஜித்ரேசா ரஹ்னாவார்ட் என்பவர், கைது செய்யப்பட்டு மக்கள் முன்னிலையில் ஈரானிலுள்ள மஷாத் என்ற பகுதியிலுள்ள ஒரு பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக, இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் க்ரேன் ஒன்றில் ஒருவர் தூக்கிலடப்படும் காட்சிகளும் புகைப்படங்களும் அந்த இணையதளத்தில் பதிவாகியுள்ளன. அக்காட்சியில், தூக்கிலிடப்படும் நபருக்கு பின்னே மாஸ்க் அணிந்தபடி காவலர்களும், அவர்கள் பின்னே பேரிகாட்களும் உள்ளன. அதன்பின் மக்கள் பலரும் அதை பார்த்துக்கொண்டுள்ளனர்.

image

இதற்கு முன் தூக்கிலிடப்பட்ட மோஷன் சேகரியும், பாசிஜ் துணை ராணுவப் படையினரை தாக்கியதற்காகவே தூக்கிலிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மத்திய தெஹ்ரானில் நீண்ட கத்தியுடன் பாசிஜ் துணை ராணுவப் படையை சேர்ந்த ஒருவரை மோஷன் சேகரி தாக்கியதாக அவர்மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இவர்களில் தற்போது தூக்கிலிடபட்டதாக சொல்லப்படும் மஜித்ரேசா ரஹ்னாவார்ட், குற்றம் சுமத்தப்பட்டு ஒரு மாதத்துக்குள் (கைதாகி 23-ம் நாள்) தூக்கிலடப்பட்டிருக்கிறார். இது போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஈரானிய நீதிமன்றம் எவ்வளவு துரிதமாக செயல்படுகிறது என காட்டுகிறது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

image

மோஷன் சேகரியை, நீதிமன்றம் தீவிரவாதி என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சேகரி தூக்கில்டப்பட்டதற்கு அங்கு நீதிபதியாக உள்ள ராசவி கோரசன் காவல்துறையினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நீதித்துறையினருக்கும் `கலகக்காரர்கள் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது விரைந்து நடவடிக்கை’ எடுத்ததற்காக நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதேபோல கூர்மையான ஆயுதங்களை கொண்டு மற்றொருவரை காயப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அல்லது தீவிரவாதத்தை பரப்ப நினைப்பவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை `கடவுளுக்கு எதிராக போராடுபவர்கள்’ என்ற குற்றத்திற்காக கைது செய்து மரண தண்டனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ராசவி பேசியிருக்கிறார்.

image

ஏற்கெனவே 22 வயதான மஹான் சத்ரத் என்பவர் `கடவுளுக்கு எதிராக போராடுபவர்’ என்று கூறப்பட்டு தூக்கிலிடப்பட ஈரானிய அரசால் பட்டியல்படுத்தப்பட்டிருந்தார். பின் அந்த தூக்கிலிடும் செய்கையை தள்ளிவைத்தது ஈரானிய அரசு. அந்த முடிவை கைவிடவில்லை என்றும், தற்காலிகமாகவே அம்முடிவு தள்ளிப்போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவரும்கூட தூக்கிலப்படலாம் என்பதால், ஈரானில் பதற்றம் நிலவுகிறது. இது படுகொலைகள் என செயர்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

image

இப்படியான சூழலில் சேகரி மற்றும் மஜித்ரேசா தூக்கலிடப்பட்டிருப்பது, மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. மனித உரிமை ஆணையம் இதில் தலையிட்டு, உண்மை கண்டறிய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது. தற்போதைக்கு ஈரான் மனித உரிமை ஆணையம் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதற்கிடையே இக்குற்றச்சாட்டுகளினால் விரைவில் ஐ.நா-வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஈரான் அரசு சார்பில், அறநெறி காவல்துறை என்ற துறை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்மூலம் பெண்கள் ஆடை மீது செலுத்தும் அடக்குமுறையை கைவிடுகிறது ஈரான் அரசு என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்