Published : 06,Dec 2022 02:10 PM
ஆண்கள், பெண்கள் என கும்பலாக இளைஞரை கல்லால் தாக்கி கொடூர கொலை - பதறவைத்த சிசிடிவி காட்சிகள்

பெங்களூருவில் பெரிய கல்லை கொண்டு 30 வயது இளைஞரின் தலையில் தாக்கி கொடூர கொலைசெய்த கும்பலின் சிசிடிவி வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கே.பி அக்ரஹாரா பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியான அந்த சிசிடிவி காட்சியில், ஓரத்தில் அமர்ந்திருக்கும் இளைஞரிடம் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கொண்ட குழு ஒன்று சண்டையிடுகிறது. திடீரென தெரு சாலையின் மறுபக்கத்திற்கு ஓடிய அந்த குழுவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, அங்கிருந்து ஒரு செங்கல்லை தூக்கி வருகிறார். அதற்குள் மற்ற அனைவரும் இளைஞரை தரையில் தள்ளி அழுத்தி பிடிக்கின்றனர்.
அந்த பெண் முதலில் கல்லால் தாக்குகிறார். பின்னர் மற்றொரு ஆண், கல்லை எடுத்து இளைஞரின் தலையில் வேகமாக போடுகிறார். மற்றவர்கள் இளைஞர் நகர முடியாதபடி அழுத்தி பிடிக்க, அந்த நபர் மீண்டும் மீண்டும் தலையில் கல்லால் தாக்குகிறார். 1.40 நிமிடமுள்ள அந்த வீடியோ க்ளிப்பின் முடிவில் மற்றவர்களும் இளைஞரை கல்லால் தாக்குகின்றனர்.
இளைஞரின் கதறல் சத்தம்கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை குற்றவாளிகள் யாரும் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படவில்லை.
கொலை செய்யப்பட்ட இளைஞர் பதாமி நகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்: மனதை பாதிக்கக்கூடிய காட்சிகள் என்பதால், பலவீனமானவர்கள் இதனைப் பார்க்கவேண்டாம் (Courtasy: NDTV)
Caught On Camera: Bengaluru Man Killed, Group Smashes His Head With Stones https://t.co/lME6Mfzp0Hpic.twitter.com/RXUJmR12hk
— NDTV (@ndtv) December 6, 2022