Published : 28,Nov 2022 08:10 AM
`குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துகிறது பாஜக’- தேர்தல் ஆணையத்தை நாடிய காங்கிரஸ்!

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில், குழந்தைகளை ஈடுபடுத்துவதாக கூறி பாஜக மீது காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் `சிறு குழந்தைகளை வைத்து பாஜக பிரசாரம் செய்கிறது. குழந்தைகளை தவறான வகையில் பயன்படுத்திக்கொள்கின்றனர்’ என்று புகாரளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக சிறுமியொருவர் காணொளி வாயிலாக பாஜக-வுக்கு வாக்கு சேகரித்திருந்தார். அச்சிறுமியை அழைத்து, பிரதமர் மோடி நேரில் சந்தித்து தன் பாராட்டுகளை தெரிவித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அவற்றை குறிப்பிட்டு காங்கிரஸ் புகார் அளித்திருந்தது.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி இரு சிறுவர்களுடன் இணைந்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 6 வருடத்துக்கு முன், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த அந்த 2 பழங்குடி சிறுவர்கள் இருவரிடம் பிரதமர் மோடி பேசுவது போல் அந்த வீடியோ உள்ளது. இதுகுறித்து தனது தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டுள்ளார் மோடி.
#WATCH via ANI Multimedia | Gujarat: PM Modi speaks about two orphan tribal boys at rally in Netranghttps://t.co/6Pk6TOfa7B
— ANI (@ANI) November 27, 2022
அவர் பேசுகையில், “இந்த பிரச்சாரத்துக்கு வருவதற்கு எனக்கு கொஞ்சம் தாமதாகிவிட்டது. அதற்கு காரணம், நான் வழியில் சந்தித்த இரு ஆதரவற்ற சிறுவர்கள். அவர்கள் வாழ்வு, இந்த அரசின் சீரிய முயற்சியினால் முன்னேற்றம் கண்டுள்ளது. சிறுவர்களில் ஒருவருக்கு 8 வயதும், இன்னொருவருக்கு 6 வயதும் ஆகிறது. சகோதரர்களான இவர்கள், ஆறு வருடங்களுக்கு முன் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
கவனிக்க ஆள் இல்லாததால், ஒருவரையொருவர் கவனித்துக்கொள்கின்றனர். இவர்களை பற்றி நான் அறிந்தவுடன், பாஜக-வின் உறுப்பினர் சி.ஆர்.படில் (குஜராத் பாஜக தலைவர்) என்பவரை அனுப்பி அவர்களின் படிப்புக்கு வழிவகை செய்ய சொன்னேன். மேலும் அவர்கள் தங்க இடமளிக்கவும் ஏற்பாடு செய்தேன். இன்று அவர்களை நேரில் பார்த்தேன். அப்போது அவர்களில் ஒருவர் தான் இன்ஜினியராக வேண்டுமென்றும், இன்னொருவர் தான் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்றும் கூறினர். அதை கேட்டபோது, என் இதயம் மிகவும் பெருமைகொண்டது. அவர்களுக்கு இப்போது பெற்றோர் இல்லையென்ற போதிலும், வீடு இல்லாமல் இருந்தாலும்கூட, அவர்கள் கனவு பெரிதாக இருக்கிறது. அதுவே என்னை பெருமையடையச் செய்கிறது” என்றுள்ளார்.
பிரதமர் பெருமிதம் தெரிவித்திருக்கும் இதே வேளையில், இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ` தேர்தல் பிரசாரத்துக்காக குழந்தைகளை தவறான வழியில் பயன்படுத்துவது’ என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் தரப்பில் நேரில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமென தாங்கள் நம்புவதாகவும், சீக்கிரம் பிரதமருக்கு நோட்டிஸ் அனுப்பப்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
સાંભળીએ અવિ અને જય નામના બાળકોના સંઘર્ષની હૃદયસ્પર્શી વાત માનનીય પ્રધાનમંત્રીશ્રીના મુખેથી.. #ભરોસો_તો_ભાજપનોpic.twitter.com/clj6SQoUE4
— Bhupendra Patel (@Bhupendrapbjp) November 27, 2022
இவ்விவகாரம் குறித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்திலும் காங்கிரஸ் தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.