Published : 22,Oct 2022 02:54 PM
கான்வே அதிரடியில் 200 ரன்கள் குவித்த நியூசிலாந்து! 50 ரன்னில் 4 விக்கெட் இழந்த ஆஸி.!

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.
டி20 உலகக்கோப்பையில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்து முக்கிய போட்டிகளான சூப்பர் 12 போட்டிகள் 12 அணிகளுக்கிடையே இன்றிலிருந்து தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் 12 போட்டியின் முதல் போட்டி, நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து ஓபனர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் சிதறடித்த ஃபின் ஆலன் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி வெறும் 16 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஹசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை நிறுத்தாத டெவான் கான்வே அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
ஹேங்கிங் ரோல் ஆடிய கேப்டன் வில்லியம்சன் 23 ரன்களில் வெளியேறினார். பின்னர் க்லென் பிலிப்ஸும் சொற்ப ரன்களில் வெளியேறிய, இறுதியாக கைக்கோர்த்த நீஷம் மற்றும் கான்வே கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை சேர்த்தனர். 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து டெவான் கான்வே இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
201 ரன்கள் என்னும் இமாலய இலக்கை எட்ட இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சளித்தார் டிம் சவுத்தி. அவர் வீசிய முதல் பந்தில் டேவிட் வார்னரை அவுட்டாகி பெவிலியன் திருப்பினார். வார்னரை தொடர்ந்து மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் களத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். சவுத்தி மற்றும் சாண்ட்னர் விக்கெட்டுகளை சாய்த்தனர்.
8.2 ஓவர்களில் 50 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் தற்போது களத்தில் உள்ளனர். வார்னர் 5, ஆரோன் பின்ச் 13, மிட்செல் மார்ஸ் 16, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. மீதமுள்ள 10 ஓவர்களில் 139 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா இருக்கின்றது. முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டதால தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.