Published : 15,Oct 2022 09:38 AM
கர்ப்பிணிகள், வயதான பெண்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

அரியலூர் அருகே மாடு மேய்த்த பெண்ணின் தாலியை அறுத்த வாலிபரை 2 மணி நேரத்தில் கையும் களவுமாக கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி (55). இவர் தனது முந்திரி தோப்பில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த நபரொருவர், அவரை தாக்கி வாயை துண்டால் கட்டிப்போட்டு விட்டு அவர் அணிந்திருந்த 4.5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து கிரைம் சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் ஆன தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தினர். நடத்தப்பட்ட விசாரணையில் அந்த வாலிபர் இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புரட்சி தமிழன் என்பதும், அவர் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், இவர் மீது அரியலூர் மாவட்டம் முழுவதும் 11 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இவர் வயதான பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளை குறிவைத்து இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர் என்றும் தெரியவந்திருக்கிறது.
வளர்மதி கொடுத்த வழக்கின் விசாரணையின்போது, தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போதுதான் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள வீட்டில் இருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், திருடிய தாலிச் சங்கிலியை விற்பனை செய்ய கிளம்பிக்கொண்டிருந்த புரட்சித்தமிழனை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, புரட்சி தமிழனை கைது செய்ததோடு நகைகளையும் பறிமுதல் செய்தனர்.