Published : 19,Sep 2022 07:22 AM

``இதை செய்தால்தான் 2-ம் பாகம் எடுப்பேன்"- கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர் ஐசரி கனேஷ்! #VTK

Vendhu-Thanidha-Kaadu-thanks-giving-meet

வெந்து தணிந்தது காடு படம் வெற்றியடைந்திருப்பதற்கு நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்தது படக்குழு. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, நீரஜ் மாதவ், ஒளிப்பதிவாளர் சித்தார்தா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கௌதம் மேனன் பேசுகையில், "தேங்க்ஸ் கிவ்விங் மீட் என சொன்னார்கள். தேங்க்ஸ் மட்டும் சொல்வோமா, இல்லை எதாவது பேசுவோமா என யோசிக்கிறேன். ஏனென்றால் ஏதாவது சொல்லப் போய் தவறாக புரிந்து கொள்ளப்படுமோ என கவலையாக உள்ளது. படம் வெளியாகும் முன் தூங்கிவிட்டு வாருங்கள் எனக் கூறினேன். அதை அடிக்கோடிட்டு அதைப் பெரிய செய்தியாக்கிவிட்டார்கள். நான் ஃப்ளைட்டில் எங்காவது செல்கிறேன் என்றால் என்னுடைய அம்மா நன்றாக தூங்கிவிட்டு போக சொல்வார்.

image

ஃபளைட்டில் தூங்க முடியும் என்பது அவருக்கும் தெரியும். ஆனாலும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்பதால் அப்படி சொல்வார். அந்த மாதிரி தான் நானும் சொன்னேன். ஆனால் அது இவ்வளவு பெரிய பேசு பொருள் ஆகும் எனத் தெரியாது. இப்போது படம் பற்றி பேசுவோம். என்னுடைய மற்ற படங்களை விட, இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருக்கிறது. அதுதான் படத்தை பெரிதாக சென்று சேர்த்திருக்கிறது. நெகட்டிவ் ரிவ்யூவுக்கும் நன்றி. அதில் சொல்லப்படும் குறைகளை என்னுடைய குழு குறித்து வைக்கிறார்கள். தவறுகளை சரி செய்ய அது எனக்கு உதவும்.

சில நேரங்களில் விமர்சனம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். நானும் எந்தப் படத்திற்கும் விமர்சனம் பார்த்துவிட்டு செல்ல மாட்டேன். படம் பார்த்துவிட்டு தான் விமர்சனம் படிப்பேன். என்னுடைய பார்வையை மாற்றும் படி சில கருத்துகள் அதில் இருக்கும். கூடவே இது ஒருவரின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் விஷயமோ என்று கூடத் தோன்றும். ஏனென்றால் இது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என நினைத்தேன். அது சில நேரங்களில் நடக்கும், சில நேரங்களில் நடக்காது. ஆனால், விமர்சனம் செய்வது அவர்களின் வேலை என தோன்றிய பின், இந்த யோசனைகளை நிறுத்திவிட்டேன்.

image

ஒரு படத்தின் உருவாக்கத்தில் நிறைய சிரமங்கள் உண்டு. அதிலும் முதலில் ஒரு கதை முடிவு செய்து, பின்பு வேறு கதையை மாற்றி அதை ஹீரோ தயாரிப்பாளரிடம் சொல்லி சம்மதிக்க வைத்து, அவர்களின் ஒத்துழைப்போடு படத்தை எடுத்து முடிக்க வேண்டும். பின்பு எடிட்டிங்கின் போது படத்தின் லென்த் பற்றி கேள்வி வரும். இந்தப் படத்தின் லென்த்தை குறைக்க சொல்லி என் முன்பாகவே ஐசரி கணேசனிடம் கேட்டார்கள். ஆனால் அவர் இதுதான் சரியான நீளம் என சொல்லி உறுதுணையாக நின்றார். இவ்வளவுக்குப் பிறகு ஒரு படம் வெளியாகி மக்களிடம் இந்த அளவு வெற்றி பெற காரணம் நீங்கள் இந்தப் படத்தைப் பற்றி எழுதியதுதான்.

image

சிம்புவுடன் எனது பயணம் பெரியது. இரண்டு படங்கள் செய்தோம். கொரோனா லாக்டவுனின் போது `கார்த்திக் டயல் செய்த எண்' பற்றி சொன்னேன், சம்மதித்தார். `நதிகளிலே நீராடும் சூரியன்' படக் கதையுடன் சென்றேன் சம்மதித்தார். அதற்கான ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தக் கதையைக் கூறினேன். இதற்கும் சம்மதித்தார். ஒரு நடிகனுக்கு இதெல்லாம் சுலபம் இல்லை. நானும் சில படங்களில் நடித்திருக்கிறேன் என்ற முறையில் சொல்கிறேன். நடிப்பு மிகக் கடினமான ஒன்று. இப்போதெல்லாம் நடிகர்கள் மேல் பெரிய மரியாதை வந்திருக்கிறது. இந்த படத்தில் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம். எல்லாவற்றையும் ஒரே டேக்கில் நடித்துக் கொடுப்பார். இப்படியான பரிசோதனை முயற்சியுள்ள படத்தில் நடித்ததற்கு சிம்புவுக்கு நன்றி.

image

ரஹ்மான் சாரிடம் முதலில் `நதிகளிலே நீராடும் சூரியன்' படத்திற்காக சென்று, அவர் மூன்று பாடல்களை கம்போஸ் செய்தும் கொடுத்தார். அதன் பின் இந்த கதையை கூறிவிட்டு, நான் அதே ட்யூனுக்கு வேறு வரிகள் வைத்து பயன்படுத்தலாம் என்றேன். இல்லை நான் புதிதாக கம்போஸ் செய்கிறேன் என்றார். இன்று மல்லிப்பூ பாடல் பெரிய அளவில் வரவேற்கப்படுகிறது. அதற்கு காரணம் ரஹ்மான் சார். அந்த இடத்தில் இப்படி ஒரு பாடல் வைப்போம் எனக் கூறியது ரஹ்மான் தான். இப்படி படத்தில் பல நல்ல விஷயங்கள் இணைந்துள்ளது" என்றார்.

கௌதம் வாசுதேவ் மேனனை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பேசுகையில், "இந்தப் படம் வெறும் ஹிட் இல்லை... பம்பர் ஹிட். நான்கே நாட்களில் பெரிய கலெக்ஷன் வந்துள்ளது. இந்தப் படத்தில் சிம்புவின் நடிப்புக்கு ஜனாதிபதி விருது கிடைக்கும் என நம்புகிறேன். அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். கௌதம் மேனனும் நானும் நல்ல நண்பர்கள். இது அவர் படமே இல்லை என சொல்லும் அளவுக்கு வேறு மாதிரி எடுத்திருக்கிறார். இந்த மாதிரியும் தன்னால் படம் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.

image

படத்தின் டைட்டில் `வெந்து தணிந்தது காடு’ எனச் சொன்ன போது, டைட்டில் நெகட்டிவாக இருக்கிறது என சிலர் சொன்னார்கள். ஆனால் அந்த சென்டிமென்டை நான் நம்பவில்லை. இப்போது படம் பெரிய ஹிட்டாகியிருக்கிறது. படம் நன்றாக இருந்தால் ஓடும். வெந்து தணிந்தது காடு 2 பற்றி கேட்கிறார்கள். பார்ட் 2 நிச்சம் உண்டு. அதன் ஆயத்த பணிகளில் கௌதம் - ஜெயமோகன் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரே ஒரு கண்டிஷன், இரண்டாம் பாகத்தில் கமர்ஷியல் எலமென்ட்ஸ் எல்லாம் சேர்த்து வேறுமாதிரி கதை எழுதினால் தான் எடுப்பேன்" என்றார்.

காணொலி வாயிலாக பேசிய ஜெயமோகன் "இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். கோவையில் என்னுடைய மணிவிழா நண்பர்களால் நடத்தப்பட்டது. அதே நாளில் வெந்து தணிந்தது காடு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. படத்தின் வெற்றிக்குப் பிறகு நடக்கும் இந்த நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தம் தான்.

image

ஆனால் மானசீகமாக நான் அங்கு தான் இருக்கிறேன். `மல்லிப்பூ பாடல்’ தமிழகம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதன் அடுத்த பாகம் பிரம்மாண்டமாகவும் தீவிரமாகவும் ஆழமாகவும் இருக்கும் என்பதை இந்த நேரத்தில் சூளுரைப்போம்."

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்