Published : 07,Sep 2022 09:26 PM
வெள்ளத்தில் மூழ்கிய சொகுசு கார்கள்!டிராக்டரில் பயணப்பட்ட சிஇஓக்கள்! பெங்களூரு பரிதாபங்கள்!

கர்நாடக தலைநகர் பெங்களுருவில் கோடீஸ்வரர்களையும், திக்கற்றவர்களாக மாற்றியிருக்கிறது கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பகுதியில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் எப்சிலான் (Epsilon) பகுதி மிகவும் அழகான ஆடம்பரமான பகுதியாக பார்க்கப்பட்ட இடம். நாகவரா ஏரி அருகே அமைந்துள்ள இந்த இடத்தில் குறைந்தபட்சமாக ஒரு வீட்டின் விலை பத்துகோடியில்தான் தொடங்குகிறது.
ஆனால் அந்த இடத்தின் இன்றைய நிலையோ அவர்கள் இதுவரை கற்பனையில் கூட எண்ணிப் பார்க்காத துயரமாக மாறியிருக்கிறது. 2 நாட்கள் பெய்த கனமழையில், பெங்களுருவின் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்த நிலையில், பல தொழில் ஜாம்பவான்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி படகில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பர கார்கள் நீரில் மூழ்கி மிதக்கின்றன. வீட்டில் உள்ள பொருட்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், படகுகளிலும், ட்ராக்டர்களிலும் ஏறி குடும்பத்துடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
கட்டுமான நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான வினோத் கவுசிக், தனது குடும்பத்துடன் ட்ராக்டரில் வெளியேறினார். பர்ப்பிள் பிராண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனர் மீனா கிரிசபல்லாவும் (Meena Girisaballa) இவ்விதமே வெளியேற நேர்ந்தது.
பெலாந்துர் உள்ளிட்ட பெங்களுருவின் கிழக்குப்பகுதிகள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், சாலைகளில் ஆறுபோல மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.