Published : 05,Aug 2022 01:14 PM
பிரமாண்ட விமான நிலையம் அமைக்க தயாராகிறாரா எலான் மஸ்க்? அவரே கொடுத்த விளக்கம்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சொந்தமாக ஜெட் வைத்திருப்பது பலரும் அறிந்த தகவல்தான். அவர் தற்போது ஜெட் மட்டுமன்றி தனியொரு விமான நிலையத்தையும் தனக்காக தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதை மறுத்துள்ளார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க், டெக்ஸாஸில் புதிய விமான நிலையத்தை தொடங்க இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக தெரிவித்து வந்தன . குறிப்பாக ஆஸ்டோனியா என்ற ஊடகம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் உள்ள பெஸ்ட்ராப் பகுதியில் எலான் மஸ்க் தனது விமான நிலையத்தை கட்ட இருப்பதாகக் கூறியது.
மத்திய டெக்ஸாஸ் பகுதியில், கொலராடோ என்ற ஆற்றுப்பகுதியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு எலான் மஸ்க்கிற்கு சொந்தமாக உள்ளது. கிட்டத்தட்ட 2,500 ஏக்கர் நிலம் அவருக்கு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆகவே அங்குதான் அவர் தனது விமான நிலையத்தை உருவாக்குவார் என சொல்லப்பட்டது. இந்த விமான நிலையம், டெஸ்லாரடி என்று பெயரிடப்படலாம் என்றும் கூறப்பட்டது. டெஸ்லாவின் தலைமை அலுவலகமும் இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது என்பதால் இத்தகவல் கூறப்பட்டது.
இதுகுறித்து மஸ்க் தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அதற்கு தற்போது பதிலளித்துள்ளார் மஸ்க். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், `இந்த செய்தி உண்மையில்லை. டெஸ்லா நிறுவனம், ஆஸ்டின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 5 நிமிடங்களில் சென்றுவிடும் தொலைவில்தான் உள்ளது. அப்படியிருக்க, அப்பகுதியில் இன்னொரு தனியார் விமான நிலையத்தை தொடங்குவது முட்டாள்தனமான முயற்சியாக இருக்கும். அதேநேரம், தற்போது இருக்கும் ஆஸ்டின் சர்வதேச விமான நிலையத்தின் ரன்-வே நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை’ என்றுள்ளார்.
Not true. Tesla is 5 mins from Austin International airport. Would be silly to build another private airport, however the existing commercial airport needs another runway, as Austin is growing fast!
— Elon Musk (@elonmusk) August 4, 2022
ஒருவேளை எலான் மஸ்க் தனது சொந்த விமான நிலையத்தை கட்டினாலும்கூட, அதற்கு அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் இருக்குமென சொல்லப்படுகிறது. காரணம், அமெரிக்காவின் பைடன் அரசாங்கத்துடன் எலான் மஸ்க்கிற்கு அந்தளவுக்கு நல்ல உறவு இப்போதைக்கு இல்லை.
விமான நிலையம் தொடர்பான திட்டம் மட்டுமன்றி, மஸ்க் தனது ஜெட்டையும் மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் சொல்லப்பட்டு வந்தன. மஸ்க்கின் தற்போது வைத்திருக்கும் ஜி700 ஜெட், சுமார் 78 டாலர் மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.600 கோடி) இருக்கலாம். இந்த நிலையில் அவர் அதை மேலும் மேம்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் மஸ்க் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.