Published : 22,Jul 2022 02:26 PM

அமைதி வழியில் போராடிய மக்கள் மீது பயங்கர தாக்குதல் - ராஜபக்சேவாக உருவெடுக்கும் ரணில்?

srilankan-military-attacks-protesters-and-press-people

இலங்கையில் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பது போல, அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த மக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, கொரோனா ஊரடங்கு, சீனாவிடம் இருந்து வாங்கிய அளவுக்கு அதிகமான கடன் போன்ற பல்வேறு காரணங்களால் அந்நாட்டின் நிதிநிலை பெருமளவில் சரிந்தது. இறக்குமதி செய்ய கூட இலங்கை அரசிடம் பணம் இல்லாததால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு பஞ்சத்தை நோக்கி செல்வது பற்றி துளியும் கவலைப்படாமல் ராஜபக்ச குடும்பத்தினர் பொருளாதாரக் கொள்கையில் மேலும் மேலும் தவறு செய்து கொண்டே இருந்தனர்.

image

இதனால் பொறுமையிழந்த மக்கள், கடந்த மார்ச் மாதம் போராட்டத்தில் குதித்தனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை அரசாங்கம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தை அடக்க முடியாமல் அரசாங்க இயந்திரம் திணறியது. ஒருகட்டத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் ஓடி ஒளிந்து கொள்ளும் அளவுக்கு போராட்டம் சென்றது.

அதன் பின்னர், புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நியமித்தார். புதிய அமைச்சரவையும் உருவாக்கப்பட்டது. புதிய அராங்கம் பொருளாதாரத்தை சீரமைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. இதனால் கடந்த மாதம் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்தது. இதன் ஒருகட்டமாக, அதிபர் மாளிகைக்குள் புகுந்த மக்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்வின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த முறை மக்கள் கிளர்ச்சியை கண்டு பயந்த அதிபர் கோட்டாபய ராஜபக்சே, நாட்டை விட்டே தப்பியோடினார்.

image

இதன் தொடர்ச்சியாக, இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, பின்னர் முறைப்படி தேர்தலை சந்தித்து இலங்கை அதிபராக நேற்று பதவியேற்றார். ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரை, கோட்டாபய ராஜபக்சவை போல 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என முடிவெடுக்கும் நபர் கிடையாது; ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர் என்பதால் இலங்கையின் இன்றைய நிலைமையை அவர் மாற்றுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அதேபோல, ராஜபக்ச குடும்பத்தினரை போல சர்வாதிகார அரசியலில் ரணிலுக்கு நம்பிக்கை கிடையாது என்ற பிம்பமும் அவருக்கு இருந்தது.

image

ஆனால், இந்த எண்ணங்களை தகர்க்கும் வகையில், அதிபராக பதவியேற்ற அடுத்த நாளே அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க. தங்களின் வாழ்வாதாரம் பறிபோய்விட்ட ஆதங்கத்தில் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் முன்பு போல இல்லாமல், அமைதி வழியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிபர் மாளிகை முன்பு கூடாரங்களை அமைத்து போராட்டக்காரர்கள் தங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் ராணுவ வீரர்கள், போலீஸார் அடங்கிய ஒரு பெரும் படை அதிபர் மாளிகைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்கார்களின் கூடாரங்களை பிரித்தெறிந்தனர். பின்னர் அங்கிருந்த போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஏராளமான பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பாதுகாப்புப் படையினர் நடத்தும் வெறியாட்டத்தை படம்பிடித்தனர். இதனை கவனித்த பாதுகாப்புப் படை வீரர்கள் பத்திரிகையாளர்கள் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் இருந்த செல்போன்கள், கேமராக்களையும் அவர்கள் பறித்தனர்.

image

அதிபராக பதவியேற்ற அடுத்த தினமே, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீதும், செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீதும் பயங்கர தாக்குதலை ரணில் விக்ரமசிங்க அரசு நிகழ்த்தியிருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. அராஜக - அடக்குமுறை ஆட்சியை நடத்தி, தன்னை சர்வாதிகாரியாக காட்டிக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தினர் உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டே தப்பியோடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவை அனைத்துக்கும் நேரடி சாட்சியாக விளங்குபவர் இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்க. இருந்தபோதிலும், அதிகாரப் பதவியில் அமர்ந்துவிட்டதால் ராஜபக்சேக்களுக்கு ஏற்பட்ட நிலைமையை ரணில் மறந்து விட்டதாகவே தெரிகிறது. ஏற்கனவே கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் இலங்கை மக்களை அனுசரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை சிறிது சிறிதாக மீட்டுக் கொடுப்பதே ஒரு புத்திசாலித்தனமான அதிபரின் அணுகுமுறையாக இருக்கும். அதை விடுத்து, சர்வாதிகாரப் போக்கை ரணில் கையில் எடுப்பார் என்றால், அவரது முடிவுரைக்கு அவரே ஆரம்பப் புள்ளியை வைத்து விட்டார் என்றே அர்த்தம்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்