Published : 11,Jul 2022 07:43 PM
மிரட்டலாக வெளியானது ‘சூர்யா41’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் -ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் கடைசி சில நிமிடங்களில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். படத்தின் வெற்றிக்கு இந்தக் கதாபாத்திரமும் துணை போயிருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன், தனது ரோலக்ஸ் ஆடம்பர வாட்ச்சை நடிகர் சூர்யாவுக்கு பரிசளித்தது வைரலாகியது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் ‘சூர்யா 41’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளப் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. நாயகியாக ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் ஆரம்பிக்க உள்ளது.
இதற்கிடையில் படப்பிடிப்பு தளத்தில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் பிரச்னைகள் இருந்து வந்ததாகவும், அதனால் இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில், இயக்குநர் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த வதந்திகளுக்கு எல்லாம் சூர்யா முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு பாலா - சூர்யா மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவந்தநிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையான ‘வணங்கான்’ என்றப் பெயர் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலாவின் பிறந்தநாளையொட்டி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…! #DirBala #வணங்கான் #Vanangaan #Achaludu pic.twitter.com/OAqpCRCWgx
— Suriya Sivakumar (@Suriya_offl) July 11, 2022