Published : 10,Jul 2022 06:18 PM

நடுக்கடலில் போலீஸ் குவிப்பு - தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தும் படகுகள் விரட்டியடிப்பு

Cops-monitors-on-Cuddalore-and-Puducherry-fishing-areas-who-use-banned-boats-and-nets

கடலூர், புதுவை மீன்பிடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தும் படகுகள் விரட்டியடிக்கப்பட்டது. நடுக்கடலில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மற்ற மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, நேற்று சாமியார் பேட்டை பகுதியில் கடலூர் மாவட்டம், புதுவை மாநிலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலுள்ள 60 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், இரட்டை மடி வலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், அதிக திறன் கொண்ட படகுகளில் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

அப்போது மீன்வளத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் வருவாய்துறை அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது தடை செய்யப்பட்ட வலைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனவே நாங்கள் மீன்பிடிக்க செல்லமாட்டோம்; தொடர் போராட்டத்தை ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.

image

இதனையடுத்து காவல்துறையும், மீன்வளத்துறையும், வருவாய் துறையும் இணைந்து ஐந்து நாட்களுக்குள் உங்கள் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றும்; சுருக்கமடிவலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் இன்று போலீசார் கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டு படகுகளில் ரோந்து சென்று புதுவை மாநிலத்தை சேர்ந்த மீன்பிடி படகுகளையும், அதிக திறன் கொண்ட படகுகளையும் எச்சரிக்கை செய்தனர்.

image

தடை செய்யப்பட்ட வலைகளைக்கொண்டும், அதிக திறன்கொண்ட படகுகளைக் கொண்டும் மீன்பிடித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், புதுவை மாநில மீனவர்கள் இந்த பகுதிக்கு வரக்கூடாது; மீறி வந்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. கடல் முழுவதும் தற்போது போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் கடலூர் கடல் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.